தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் போது அ.தி.மு.க. பதறுகிறது


தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் போது அ.தி.மு.க. பதறுகிறது
x

போதைப் பொருளை தடுப்பதற்காக தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் போது அ.தி.மு.க பதறுகிறது என காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

வேலூர்

போதைப் பொருளை தடுப்பதற்காக தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் போது அ.தி.மு.க பதறுகிறது என காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

விருது வழங்கும் விழா

வேலூர் மாவட்டத்தில் சிறப்பாக சேவை புரிந்த ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றியக்குழு தலைவர்களுக்கு விருது வழங்கும் விழா காட்பாடி பிரம்மபுரத்தில் நடந்தது. வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். கதிர்ஆனந்த் எம்.பி., ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ., ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறந்த ஊராட்சி தலைவர்கள் மற்றும் ஒன்றியக்குழு தலைவர்களுக்கு தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சான்றுகளையும், விருதுகளையும் வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

வேலூர் மாவட்ட அளவில் இதுபோன்ற ஊராட்சி தலைவர்களை ஊக்கப்படுத்த அவர்களின் சேவையை மேம்படுத்த விருதுகளை வழங்கி கவுரவித்தது பாராட்டத்தக்கது. அடுத்த ஆண்டு முதல் சிறந்த ஒன்றியக்குழு தலைவர்கள், ஊராட்சி தலைவர்களுக்கு நான் என்னுடைய சொந்த பணத்தில் இருந்து நிதி கொடுப்பேன். நாங்கள் போடும் திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்வது ஊராட்சி தலைவர்கள் தான். நீங்கள் இல்லை என்றால் திட்டங்கள் போய் சேராது. பணத்தை செலவு செய்யும் அதிகாரம் ஊராட்சி தலைவர்களுக்கு தான் உண்டு. ஊராட்சி தலைவர்களின் கையில் தான் ஆட்சியை நிலைநிறுத்துவதோ, மாற்றுவதோ உள்ளது.

அதிகாரிகள் இடத்தில் கண்டிப்பு

வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிராமங்களுக்கு சென்று திட்டங்கள் செயல்படுவதை பார்க்க வேண்டும். அதிகாரிகளிடத்தில் கலெக்டர் கண்டிப்பு காட்ட வேண்டும். அன்பும் காட்ட வேண்டும். இரண்டும் இருந்தால் தான் நிர்வாகத்தை சிறப்பாக செய்ய முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் திட்ட அலுவலர் ஆர்த்தி, வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில்குமார், காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன், மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, மாநகராட்சி கவுன்சிலர் விமலா சீனிவாசன் உள்பட பல கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. பதறுகிறது

மதுரையில் தி.மு.க அமைச்சர் மீது பா.ஜ.க.வினர் காலணி வீசியது பண்பாடு இல்லாத செயல். அ.தி.மு.க., ஆட்சியில் பல வங்கிகளில் கொள்ளை அடிக்கப்பட்டது. சட்டமன்றத்தில் நாங்கள் பேசிய போது அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்வளவு ஏன் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட்டிலேயே கொலை நடந்தது. அதை அவர்கள் ஏன் கண்டுபிடிக்கவில்லை. தமிழக முதல்வர், பிரதமரை சந்தித்து பேசும் போது மேகதாது அணை குறித்து கூட பேசலாம். நீர் நிலைகள் ஆக்கிரமிப்புகளை எடுக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. நாங்கள் மக்களுக்கு வீடுகளை கட்டி கொடுத்துவிட்டு ஆக்கிரமிப்புகளை எடுக்கிறோம் என்று சொல்கிறோம்.

ஆனால் நீதிமன்றத்தில் வீடுகட்டி கொடுக்க கூடாது என சொல்கிறார்கள். எங்களுக்கு தான் மக்கள் மத்தியில் சென்று நிற்கும் போது அவர்களின் கஷ்டம் தெரியும். போதை பொருள் தடுப்பிற்காக தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் போது அ.தி.மு.க. பதறுகிறது. அவர்கள் தான், இதில் மாட்டியவர்கள் யார்? யார்? உள்ளே செல்ல போகிறார்கள் என்பது தெரியும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story