சொகுசு காரில் சென்றபோதுஆந்திர டிரைவரை தாக்கி ரூ.2 கோடி கொள்ளையடித்த மர்ம கும்பல்;ஹவாலா பணமா? தனிப்படை தீவிர விசாரணை
பவானி அருகே ஆந்திர டிரைவரை தாக்கி சொகுசு காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.2 கோடியை 5 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்து சென்றது. அந்த பணம் ஹவாலா பணமா? என போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பவானி
பவானி அருகே ஆந்திர டிரைவரை தாக்கி சொகுசு காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.2 கோடியை 5 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்து சென்றது. அந்த பணம் ஹவாலா பணமா? என போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சொகுசு கார்
ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியை சேர்ந்தவர் பர்கத் சிங் என்கிற மடப்பால். இவருடைய மகள் கோவையில் தங்கி உள்ளார். பர்கத் சிங்கிடம் டிரைவராக அதே பகுதியை சேர்ந்த விகாஸ் ராகுல் (வயது 32) என்பவர் பணியாற்றி வருகிறார்.
இவர் கோவையில் உள்ள பர்கத் சிங்கின் மகளிடம் இருந்து ரூ.2 கோடியை வாங்கிக்கொண்டு சொகுசு காரில் ஆந்திர மாநிலம் நெல்லூர் நோக்கி புறப்பட்டார். இந்த சொகுசு காரானது ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த லட்சுமி நகர் காவிரி ஆற்று பாலம் அருகே நேற்று அதிகாலை சென்று கொண்டு இருந்தது.
டிரைவரை தாக்கி கார் கடத்தல்
அப்போது அங்கு வந்த 3 பேர் திடீரென சொகுசு காரை தடுத்து நிறுத்தினர். இதில் சுதாரித்துக்கொண்டு சொகுசு காரை விகாஸ் ராகுல் வேகமாக ஓட்ட முயன்று உள்ளார். இதனிடையே மேலும் 2 பேர் சேர்ந்து சொகுசு காரை தடுத்து நிறுத்தினர். இதனால் பயந்து போன அவர் காரை நிறுத்தி உள்ளார். உடனே அந்த 5 பேரும் சேர்ந்து கார் டிரைவரான விகாஸ் ராகுலை அடித்து உதைத்து உள்ளனர். பின்னர் அவரை காரில் இருந்து தள்ளிவிட்டதுடன், அந்த கும்பல் காரையும் எடுத்து சென்றுவிட்டது. இதில் உயிர் தப்பிய விகாஸ் ராகுல், லட்சுமி நகர் அருகே உள்ள போலீஸ் சோதனை சாவடிக்கு சென்று நடந்த சம்பவங்களை கூறினார்.
30 நிமிட நேரத்தில் கார் மீட்பு
இதுபற்றி அறிந்ததும் போலீசார் உடனடியாக மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் வயர்லெஸ் மூலம் தகவல் தெரிவித்தனர். மேலும் நெடுஞ்சாலை ரோந்து பிரிவு போலீசாருக்கு வயர்லெஸ் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீசாரும் உஷார் ஆகி தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
தகவல் கொடுக்கப்பட்ட 30 நிமிட நேரத்தில் ஈரோட்டை அடுத்த கங்காபுரம் தனியார் ஜவுளி பூங்கா அருகே தேசிய நெடுஞ்சாலையில் சொகுசு கார் ஒன்று கேட்பாரின்றி நிற்பதை போலீசார் கண்டுபிடித்தனர். மேலும் அந்த கார்தான் கடத்தப்பட்ட கார் என்பதை விகாஸ் ராகுலும் உறுதி செய்தார்.
ரூ.2 கோடி கொள்ளை
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலமுருகன், துணை போலீஸ் சூப்பிரண்டு அமிர்தவர்ஷனி, இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணமூர்த்தி (பவானி), சண்முகசுந்தரம் (அம்மாபேட்டை) மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சொகுசு காரை சோதனை செய்தனர். அப்போது காரில் பணம் கொண்டு செல்வதற்காக ரகசிய தனி அறைகள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அதில் ரூ.2 கோடி பணம் வைத்து இருந்ததாக விகாஸ் ராகுல் விசாரணையின்போது போலீசாரிடம் தெரிவித்தார். மர்ம கும்பல் அந்த பணத்தை கொள்ளையடித்துவிட்டு காரை மட்டும் அங்கு விட்டுச்சென்றது தெரிய வந்தது..
ஹவாலா பணமா?
மேலும் மோப்ப நாய் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது. அது மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் வரை ஓடியது. ஆனால் யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. அதுமட்டுமின்றி திருப்பூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.
இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த தனிப்படை போலீசார் பர்கத் சிங்கின் பணத்தை அபகரிக்க டிரைவர் போடும் நாடகமா? அல்லது உண்மையாகவே பணம் கொள்ளையடிக்கப்பட்டதா? ஹவாலா பணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆந்திர டிரைவரை தாக்கி ரூ.2 கோடி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஈரோடு மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.