ராணிப்பேட்டை உழவர் சந்தையில் குளிர்பதன கிடங்குகள் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?
ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உழவர் சந்தையில் கட்டப்பட்டுள்ள குளிர்பதன கிடங்குகள் பயன்பாட்டுக்கு வருவது எப்போது என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உழவர் சந்தையில் கட்டப்பட்டுள்ள குளிர்பதன கிடங்குகள் பயன்பாட்டுக்கு வருவது எப்போது என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
உழவர் சந்தைகள்
தமிழகத்தில் விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளைவிக்கும் பொருட்களை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக விற்பனை செய்து பயன்பெறும் வகையில் கடந்த 1999-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் அப்போதைய முதல் அமைச்சர் கருணாநிதியால் உழவர் சந்தை கொண்டு வரப்பட்டது. இந்த உழவர் சந்தைகளால் விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை நேரடியாக விற்பனை செய்வதுடன், பொதுமக்களும் குறைந்த விலையில், தரமான காய்கறிகளை வாங்கி பயன்பெற்று வருகிறார்கள்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ராணிப்பேட்டை, ஆற்காடு உள்ளிட்ட பகுதிகளில் உழவர் சந்தைகள் செயல்படுகின்றன. ராணிப்பேட்டையில் உழவர் சந்தையில் 40 கடைகள் உள்ளன. இங்கு அனைத்து வகை காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள், ஆற்காடு கூட்டுப் பண்ணை நிறுவனத்தின் சுமார் 900 விவசாயிகள் மூலமாக தயாரிக்கப்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், மூலிகை சூப் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும், மண்புழு உரம் உள்ளிட்ட பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது. மகளிர் குழுக்கள் மூலம் கேரட், பீட்ரூட், சாம்பார் வெங்காயம், பெரிய வெங்காயம் உள்ளிட்ட பொருட்களும், மண்பாண்ட தொழிலாளர்கள் மூலமாக மண் சட்டிகள், பானைகள், ஜாடிகள், குழந்தைகளின் விளையாட்டு பொருட்கள் உள்ளிட்டவையும் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு வாழை இலை, வாழைப்பழம், தேங்காய், இளநீர், பூ வகை பொருட்கள் அதிக அளவில் விற்பனையாகிறது.
25 டன் காய்கறிகள்
அடையாள அட்டை பெற்ற விவசாயிகள் மட்டுமே இங்கு வியாபாரம் செய்ய முடியும். இங்குள்ள அதிகாரிகள் ஒவ்வொரு சனிக்கிழமையும் மாவட்டத்தில் உள்ள ஏதாவது ஒரு கிராமத்தை தேர்வு செய்து, அங்கு விழிப்புணர்வு முகாம் நடத்துகின்றனர். அங்கு விவசாயிகளை ஒன்று திரட்டி, நிலத்தில் விளைந்த விளைப்பொருட்களை நேரடியாக உழவர் சந்தையில் விற்பனை செய்வது, அதற்கான அடையாள அட்டை பெறுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். அதனால் நாளுக்கு நாள் அதிக அளவில் விவசாயிகள் தங்களது விளை பொருட்களை உழவர் சந்தையில் விற்பனை செய்ய எடுத்து வருகின்றனர்.
தினமும் சராசரியாக 25 டன் காய்கறிகள், கீரைகள், பழங்கள் உள்ளிட்ட பொருட்கள் எடுத்து வரப்படுகிறது. சுமார் ரூ.6 லட்சம் வரை விற்பனை நடைபெறுகிறது.
தற்போது இங்கு கூடுதலாக 8 கடைகள் புதிதாக கட்டப்பட்டு வருகின்றன. காய்கறி கழிவுகளை உரமாக்குவதற்கு ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் புதிய எந்திரம் இங்கு வரவழைக்கப்பட்டுள்ளது. இந்த எந்திரம் விரைவில் செயல்பாட்டிற்கு வர உள்ளது. அதேபோல காய்கறிகள், பழங்கள், பூக்களை கெடாமல் பாதுகாக்க சோலார் மூலமாக குளிரூட்டப்பட்ட அறை கட்டப்பட்டு இன்னும் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது.
இங்கு ஆண், பெண் என இரு பாலருக்கும் தனித்தனி கழிப்பறை வசதிகளும் உள்ளன. காய்கறிகளை கழுவுவதற்கு தண்ணீர் தொட்டி உள்ளது. மேலும் இச்சந்தை மூலமாக மத்திய உணவு பாதுகாப்புத் துறை தரச்சான்று அங்கீகாரம் விவசாயிகளுக்கு வாங்கிக் கொடுத்துள்ளனர்.
இந்த உழவர் சந்தை குறித்து ராணிப்பேட்டையைச் சேர்ந்த சந்திரன் - சித்ரா தம்பதியினர் கூறியதாவது:-
இங்கு வாங்கும் காய்கறிகள், பழங்கள் புதிதாக, தரமானதாக உள்ளது. வெளி மார்க்கெட் விலையை காட்டிலும் விலை குறைவாக உள்ளது. ஒரே இடத்தில் வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களையும் இங்கு வாங்க முடிகிறது. நேரடியாக விவசாயிகளிடம் இருந்து பொருட்களை வாங்குவதால், எங்களுக்கும் லாபம் கிடைக்கிறது, அவர்களுக்கும் லாபம் கிடைக்கிறது. காய்கறிகளை பாதுகாப்பாக வைக்க குளிர் பதன கிடக்கை திறக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
நியாயமான விலையில்
ஆற்காட்டில் கண்ணமங்கலம் கூட்ரோடு அருகே உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு விற்பனை செய்யப்படும் காய்கறிகள் மொத்த விற்பனையிலிருந்து 20 சதவீதம் அதிகப்படுத்தியும், சில்லறை விற்பனையிலிருந்து 15 சதவீதம் குறைத்தும் விவசாயிகள் நேரடியாக விற்பனை செய்கின்றனர். தாழனூர், சத்திரம், கத்தியவாடி, மோட்டூர், கவரப்பாளையம், நந்தியாலம் ஆகிய பகுதிகளில் விளைவிக்கப்படும் பொருட்கள் இங்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த உழவர் சந்தையில் 30 கடைகள் உள்ளன. நாள் ஒன்றுக்கு 9 டன் முதல் 10 டன் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது. கழிப்பறை, குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. இங்கு குவியும் கழிவு பொருட்களை நகராட்சி நிர்வாகம் மூலம் தினசரி அகற்றி விடுகின்றனர்.
இங்கு காய் கறிகள் வியாபாரம் செய்யும் நந்தியாலம் கிராமத்கதை சேர்ந்த தெய்வானை கூறியதாவது:-
நான் எங்களது நிலத்தில் விளையும் கீரை வகைகள் மற்றும் கத்தரி, வெண்டை, அவரை, சுைரக்காய், பூசணி ஆகிய பொருட்களை அரசு டவுன் பஸ்சில் வாடகை இன்றி உழவர் சந்தைக்கு எடுத்து வருகிறேன். கழிப்பிட வசதி மற்றும் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. இதனால் எந்தவித சிரமமும் இன்றி காய் கறிகளை விற்பனை செய்கிறோம். காய்கறிகள் கெட்டுப்போகாமல் பாதுகாப்பாக வைக்க குளிர்பதன கிடங்கு வசதி இல்லை. அதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆற்காட்டில் உள்ள வேலூர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த அறவாழி என்ற வாடிக்கையாளர் கூறுகையில் நான் உழவர் சந்தைக்கு வந்து காய்கறி மற்றும் கீரை வகைகள் மற்றும் பழங்கள், மரச்செக்கு சமையல் எண்ணெய்கள் வாங்கிச் செல்கிறேன். இங்கு வாங்கப்படும் பொருட்கள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் உள்ளன. இடைத்தரகர்கள் இன்றி நியாயமான விலையில் வழங்கப்படுகிறது என்றார்.
இயற்கை உரம் தயாரிப்பு
திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், நாட்டறம்பள்ளி, வாணியம்பாடி ஆகிய 3 இடங்களில் உழவர் சந்தை அமைந்துள்ளது. அங்கு 46 கடைகள் உள்ளது. திருப்பத்தூர் உழவர் சந்தைக்கு தினமும் 10 டன் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது. இதனை விவசாயிகளை முழுக்க முழுக்க பயன்படுத்துகின்றனர். ஏ.கே.மோட்டூர், ஜிம்மனபுதூர், எலவம்பட்டி, காக்கணம்பாளையம், பாச்சல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து விவசாயிகள் தங்களது விளைபொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.
திருப்பத்தூர் உழவர் சந்தையில் சேகரிக்கப்படும் கழிவுகளை நவீன எந்திரம் மூலம் இயற்கை உரம் தயாரித்து விவாசிகளுக்கு குறைந்த விலையில் வேளாண்மைதுறை சார்பில் வழங்கப்படுகிறது. மேலும் விவசாயிகளின் வசதிக்காக குளிர்பதன கிடங்கு கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அதனை இன்னும் பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. அந்த குளிர்பதன கட்டிடத்தை உடனடியாக திறந்து விவசாயிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். இதனால் விவசாயிகள் விற்பனை செய்யாமல் உள்ள காய்கறிகளை அதில் வைத்து, மறுநாள் விற்பனைக்கு எடுத்துக் கொள்ள வசதியாக இருக்கும்.
உழவர் சந்தைக்கு வரும் விவசாயிகளும், பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் அனைத்தும் உள்ளது. மேலும் அனைத்து கடைகளிலும் பே.டிஎம். வைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கையில் பணம் எடுத்து செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை.
இதேபோல் வாணியம்பாடி உழவர் சந்தை தற்போது புதுப்பிக்கப்பட்டு நல்ல முறையில் உள்ளது. விவசாயிகள் தங்களது விளைபொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்து செல்கின்றனர். உழவர் சந்தைக்கு விவசாயிகள் சிரமின்றி காய்கறிகளை கொண்டு வர அரசு டவுன்பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது. தற்போது அந்த பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. அதனை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். வாணியம்பாடி உழவர் சந்தையில் வாகனங்களை நிறுத்த தனியாக வசதி செய்ய வேண்டும்.
லாபம் இல்லை
திருப்பத்தூர் உழவர் சந்தையில் காய்கறி விற்பனை செய்து வரும் பாச்சல் கிராமத்தை சேர்ந்த கலா கூறியதாவது:-
நாங்கள் எங்களது நிலத்தில் விளையக்கூடிய கத்தரிக்காய், வெண்டைக்காய், தக்காளி உள்ளிட்ட பொருட்களை பயிரிட்டுள்ளோம். அதனை மாலை மற்றும் காலை நேரங்களில் பறித்து எங்களது வாகனம் மூலம் உழவர் சந்தைக்கு கொண்டுவந்து விற்பனை செய்கிறோம். செலவு செய்யும் அளவுக்கு லாபம் இருப்பதில்லை. வெளிச்சந்தையில் விற்கும் விலைக்குதான் நாங்களும் விலை நிர்ணம் செய்ய முடிகிறது.
இருந்தாலும் பொதுமக்களுக்கு நேரடியாக விற்பனை செய்வதால் மகிழ்ச்சியாக உள்ளது. உழவர் சந்தையில் அனைத்து வசதிகளும் உள்ளது. தொலைவில் இருந்து காய்கறிகளை கொண்டு வரும் விவசாயிகளின் வசதிக்காக டவுன் பஸ் இயக்கப்பட்டது. இதன் மூலம் விவசாயிகள் தங்கள் காய் கறிகளை இலவசமாக உழவவ் சந்தைக்கு கொண்டு வந்தோம். கரோனா தொற்றுக்கு பிறகு பஸ்கள் நிறுத்தப்பட்டு உள்ளது. மீண்டும் உழவர் சந்தைக்கு அரசு டவுன் இயக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.