3-வது மின்இழுவை ரெயில் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?


3-வது மின்இழுவை ரெயில் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?
x
தினத்தந்தி 26 July 2023 1:00 AM IST (Updated: 26 July 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon

பழனி முருகன் கோவிலில் 3-வது மின்இழுவை ரெயில் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என பக்தர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

திண்டுக்கல்

நவீன ரெயில் பெட்டிகள்

உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்ல படிப்பாதை, யானைப்பாதை பிரதானமாக உள்ளன. அதேபோல் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் சிரமமின்றி சென்றுவர ரோப்கார், மின்இழுவை ரெயில் ஆகிய சேவைகள் உள்ளன. இதில் மேற்கு கிரிவீதியில் உள்ள நிலையத்தில் இருந்து 2 மின்இழுவை ரெயில்கள் இயக்கப்படுகிறது. 2 பெட்டிகள் கொண்ட மின்இழுவை ரெயிலில் சுமார் 35 பேர் வரை பயணம் செய்யலாம்.

கடந்த ஜனவரி மாதம் பழனி மின்இழுவை ரெயில்நிலையத்துக்கு நவீன வசதிகளுடன் கூடிய புதிதாக 2 மின்இழுவை ரெயில்பெட்டிகள் வாங்கப்பட்டது. குளிர்சாதன வசதி, டி.வி., கேமரா என பல்வேறு வசதிகள் கொண்ட இந்த மின் இழுவை ெரயிலில் 72 பேர் வரை பயணிக்க முடியும். இதனால் பக்தர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் பெட்டிகள் கொண்டு வரப்பட்டு பொருத்தப்படாமல் கிடப்பிலேயே இருந்தது. அதையடுத்து புதிய ரெயில் பெட்டிகளை பொருத்தி பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பக்தர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்தது.

சோதனை ஓட்டம்

அதைத்தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் ரெயில் பெட்டிகளை நிலையத்தில் உள்ள தண்டவாளத்தில் பொருத்தும் பணிகள் தொடங்கியது. தொடர்ந்து பெட்டிகள் பொருத்தப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்றது. அதன் பின்பு மலைக்கோவிலில் உள்ள நிலையத்தில் சில பணிகள் மேற்ெகாள்ளப்பட்டு வருவதால் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. இதனால் மற்ற 2 மின்இழுவை ரெயில்களில் மட்டுமே பக்தர்கள் சென்று வருகின்றனர்.

எனவே விசேஷ நாட்களில் பக்தர்கள் மின்இழுவை ரெயிலில் செல்ல நீண்ட நேரம் காத்திருக்க நேரிடுகிறது.

பராமரிப்பு பணி

இதுகுறித்து பக்தர்கள் கூறும்போது, "காற்று அதிகம் வீசும் ஆடி மாதத்தில் பழனி ரோப்கார் நிலையத்தில் வருடாந்திர பராமரிப்பு பணி நடைபெறும். அப்போது அதன் சேவை நிறுத்தப்படும். எனவே பக்தர்கள் மின்இழுவை ரெயில்களில் சென்று வருவது வழக்கம். அதன்படி ரோப்காரில் பராமரிப்பு பணி விரைவில் தொடங்க வாய்ப்புள்ளது. இந்தநிலையில் பழனியில் 2 மின்இழுவை ரெயில்கள் மட்டுமே இயக்கப்படுவதால் ஏற்கனவே பக்தர்கள் வெகுநேரம் காத்திருந்தே சென்று வருகின்றனர்.

அதேவேளையில் ரோப்கார் பராமரிப்பு பணி தொடங்கினால் மின்இழுவை ரெயிலில் பயணிக்க பல மணி நேரம் காத்திருக்கும் சூழல் உருவாகும். எனவே 3-வது மின்இழுவை ரெயில் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அப்போதுதான் பக்தர்கள் வெகுநேரம் காத்திருப்பதை தவிர்க்க முடியும்" என்றனர்.


Related Tags :
Next Story