மதுரை 'எய்ம்ஸ்' ஆஸ்பத்திரி பணி எப்போது முடிவடையும்? மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் பதில்
மதுரை ‘எய்ம்ஸ்' ஆஸ்பத்திரி பணி எப்போது முடிந்து பயன்பாட்டுக்கு வரும் என்பது குறித்து மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் பதிலளித்தார்.
சென்னை,
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசின் 9 ஆண்டு கால ஆட்சியின் சாதனை விளக்க பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடைபெற்றது.
இதில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை மந்திரி ஜிதேந்திர சிங், தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை ஆகியோர் கலந்துகொண்டு கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.
மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் கூறியதாவது:-
நாட்டின் அடையாளம் மாறியது
இந்தியா பல ஆண்டுகளாக ஊழல்கள் நிறைந்த நாடு என்று அடையாளப்படுத்தப்பட்டு இருந்தது. இதில் மாற்றம் ஏற்படாதா? நல்ல வழி பிறக்காதா? என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். இந்த நிலையில் ஒவ்வொரு இந்திய குடிமகனும் பெருமிதம் அடையும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவை மரியாதை மிக்க நாடாக மாற்றி காட்டி உள்ளார்.
தற்போது உலக நாடுகள் இந்தியாவை உற்று நோக்குகின்றன. உலகின் தலைசிறந்த தலைவராக நரேந்திர மோடி விளங்குகிறார். கொரோனா காலத்தில் தடுப்பூசியை தயாரித்து மற்ற நாடுகளுக்கு வழங்கினோம். நரேந்திர மோடியின் கடின உழைப்பால் தற்சார்பு இந்தியா தழைத்தோங்கி வருகிறது. நாட்டில் 2014-ம் ஆண்டு வரையில் 74 விமான நிலையங்கள் இருந்தது. தற்போது 148 விமான நிலையங்கள் இருக்கின்றன.
மதுரை 'எய்ம்ஸ்' பணி
என்னென்ன திட்டங்கள் தேவையோ அவற்றை உடனடியாக நிறைவேற்றி வருகிறார். பெண்களுக்கான 12 கோடி கழிப்பிடங்கள் கட்டி தரப்பட்டு உள்ளது. ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 12 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. 2014-ம் ஆண்டுக்கு முன்பு 3.25 கோடி வீடுகளுக்கு மட்டும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு இருந்தது.
70 ஆண்டுகளில் 7 எய்ம்ஸ் ஆஸ்பத்திரிகள் மட்டும் இருந்து வந்த வேளையில் இந்த 9 ஆண்டுகளில் 15 எய்ம்ஸ் ஆஸ்பத்திரிகள் கொண்டு வரப்பட்டு உள்ளது. மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி பணி 2026-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முடிக்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் அறிவித்து இருந்தோம். எனினும் அதனை விரைவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் சந்திப்பு இயக்கம்
அண்ணாமலை கூறியதாவது:-
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு 9 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்து 10-வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. இந்த 9 ஆண்டுகள் நாட்டின் மூலை முடுக்குகளில் வசிக்கும் மக்களுக்கும் முன்னேற்றத்தை தரக்கூடிய ஆட்சியாக நடந்திருக்கிறது. வருகிற காலமும் அப்படித்தான் இருக்கும். இந்த 9 ஆண்டு கால நல்லாட்சி குறித்து தமிழ்நாட்டில் மக்களிடையே எடுத்து சென்று ஒரு மாத காலம் கொண்டாட இருக்கிறோம். இதன் ஆரம்பக்கட்டம்தான் இன்று (நேற்று) நடைபெறும் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி ஆகும்.
2014-ம் ஆண்டுக்கு முன்பு உலக நாடுகள் வளர்ச்சி பாதையில் இருந்த போது மத்தியில் இருந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இந்தியாவில் மிக அதிகளவு ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தது. முன்னேற வேண்டிய நாட்டை பின்னோக்கி வைத்திருந்தார்கள். 2014-ம் ஆண்டுக்கு பின்னர் நம்முடைய நாட்டின் உண்மையான சக்தியை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
மக்களுக்கு முழுமையாக கிடைக்கிறது
ராஜீவ்காந்தி பிரதமராக இருந்த போது ஒடிசாவில் நடந்த நிகழ்ச்சியில் பேசும்போது, 'டெல்லியில் இருந்து ரூ.100 அனுப்பி வைக்கிறோம் என்றால் கடைக்கோடி மாநிலத்தில் உள்ள கடைக்கோடி மனிதனுக்கு செல்லும்போது ரூ.85 காணாமல் போய்விடுகிறது. வெறும் 15 சதவீதம் பணம் மட்டும் தான் அங்கு சென்று சேர்கிறது' என்று சொன்னார்.
இன்றைக்கு டெல்லியில் இருந்து மத்திய அரசு ரூ.100 அனுப்பி வைத்தால் தமிழ்நாட்டில் இருக்கும் கடைக்கோடி கிராமத்தில் இருக்க கூடிய மக்களுக்கு முழுமையாக அந்த ரூ.100 வருகிறது. எந்தவித தடையும் இல்லாமல் மத்திய அரசின் திட்டம் முழுமையாக வருகிறது. இது இந்திய வளர்ச்சி பாதையில் மிகப்பெரிய மாற்றம் ஆகும்.
நரேந்திர மோடி ஆட்சியின் சாதனை விளக்க மக்கள் சந்திப்பு இயக்கம் மாநிலம் முழுவதும் ஒரு மாத காலம் நடைபெறும்.
இவ்வார் அவர் கூறினார்.
சாதனை வீடியோ
முன்னதாக கூட்டம் தொடங்கியவுடன் மத்திய அரசின் சாதனை திட்டங்கள் அடங்கிய 3 நிமிட வீடியோ தொகுப்பு ஒளிபரப்பு செய்யப்பட்டது. பின்னர் அண்ணாமலை, மத்திய அரசின் ஒவ்வொரு துறையின் சாதனைகளையும் புள்ளி விவரங்களோடு பட்டியலிட்டார்.
பேட்டியின் போது அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், துணை தலைவர்கள் கரு.நாகராஜன், திருப்பதி நாராயணன், தமிழக பா.ஜ.க. சட்டமன்ற தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் எம்.பி.க்கள் கே.பி. ராமலிங்கம், சசிகலா புஷ்பா, ஊடக பிரிவு தலைவர் ரங்கா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
பா.ஜ.க. சமூக ஊடகவியலாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கூட்டம் சென்னை மயிலாப்பூரில் உள்ள ஆர்.ஆர். சபாவில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திலும் மத்திய மந்திரி ஜிதேந்திர சிங், அண்ணாமலை ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.