பஸ்சுக்காக வெயிலில் காத்து நிற்கும் பயணிகள் நிழற்குடைகள் அமைக்க தடையில்லா சான்று கிடைப்பது எப்போது?- பொதுமக்கள் எதிர்பார்ப்பு


பஸ்சுக்காக வெயிலில் காத்து நிற்கும் பயணிகள்  நிழற்குடைகள் அமைக்க தடையில்லா சான்று கிடைப்பது எப்போது?- பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x

திருப்பரங்குன்றம் பகுதியில் பஸ்சுக்காக வெயிலில் பயணிகள் காத்து நிற்கும் நிலையில் நிழற்குடைகள் அமைக்க தடையில்லா சான்று கிடைப்பது எப்போது? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மதுரை

திருப்பரங்குன்றம்,


திருப்பரங்குன்றம் பகுதியில் பஸ்சுக்காக வெயிலில் பயணிகள் காத்து நிற்கும் நிலையில் நிழற்குடைகள் அமைக்க தடையில்லா சான்று கிடைப்பது எப்போது? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

பயணிகள் நிழற்குடை

திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட தோப்பூர் ஊராட்சியில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி பஸ் நிறுத்தத்தில் சிறிய அளவில் ஒரு பயணிகள் நிழற்குடை உள்ளது. இதில் ஒரே நேரத்தில் 5-க்கும் மேற்பட்டோர் நிற்க முடியாத நிலை உள்ளது. அதனால் விரிவான நிழற்குடை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். மாணிக்கம் தாகூர் எம்.பி. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தோப்பூர் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைப்பதற்காக தனது நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.7 லட்சத்தை ஒதுக்கீடு செய்தார்.

இதனால் நிழற்குடை அமைக்ககூடிய நாளை அப்பகுதி மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் தேசிய நெடுஞ்சாலைதுறையில் இருந்து தடையின்மைக்கானஅனுமதி சான்றிதழ் வழங்கப்படாத நிலை உள்ளது. ஊராட்சி நிர்வாகத்தினர் தேசிய நெடுஞ்சாலைதுறை அதிகாரிகளிடம் தடையின்மைக்கான அனுமதி வழங்குமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

காத்திருப்பு

கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாகியும் தடையின்மை அனுமதி வழங்கிய பாடில்லை. அதனால் நிழற்குடை அமைப்பது எப்போது? என்ற அப்பகுதி மக்களிடையே கேள்வி எழுந்துள்ளது. பஸ்சில் பயணிப்பதற்காக பஸ் நிறுத்தத்திற்கு வரக்கூடியவர்கள் வெயிலில் காய்ந்தும், மழையில் நனையும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதேபோல வலையங்குளம், கூத்தியார்குண்டு பகுதியிலும் நிழற்குடை அமைப்பதற்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. தலா ரூ.7 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இதற்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறையில் இருந்து தடையின்மை சான்றிதழ் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தற்போது வெயில் காலம் என்பதால் பஸ் நிறுத்தங்களில் பயணிகளுக்கு நிழற்குடை அவசியமாக உள்ளது. இதைஅறிந்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உரிய இடங்களை ஆய்வு செய்து போர்க்கால அடிப்படையில் தடையின்மை அனுமதி சான்றிதழ்வழங்கிட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story