மின்கட்டண உயர்வை கேட்டாலே 'ஷாக்' அடிக்கிறது-ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. பேச்சு
மின்சாரத்தை தொட்டால் தான் ஷாக் அடிக்கும். மின்கட்டண உயர்வை கேட்டாலே ஷாக் அடிக்கிறது என்று அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டத்தில் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.
திருப்பரங்குன்றம்,
மின்சாரத்தை தொட்டால் தான் ஷாக் அடிக்கும். மின்கட்டண உயர்வை கேட்டாலே ஷாக் அடிக்கிறது என்று அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டத்தில் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.
ஆர்ப்பாட்டம்
திருப்பரங்குன்றத்தில் மதுரை புறநகர் அ.தி.மு.க. கிழக்கு மாவட்டம் சார்பில் தமிழக அரசின் மின்கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. மதுரை புறநகர் அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். இளைஞரணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ் வரவேற்றார்.
திருப்பரங்குன்றம் பகுதி வட்ட செயலாளர்கள் பொன் முருகன், நாகரத்தினம், தவிடன், முத்துக்குமார், பாலா, எம்.ஆர்.குமார், மகாராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அமைப்பு செயலாளரும், மாவட்ட செயலாளருமான ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ.கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
மின்சாரத்தை தொட்டால் ஷாக் அடிக்கும். ஆனால் மின்சார கட்டண உயர்வை கேட்டாலே ஷாக் அடிக்கிறது. சட்டமன்றத் தேர்தலின் போது குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்தனர். ஆனால் அதை இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
தற்போது தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு லட்சம் பேருக்கு காலை உணவு திட்டத்தை கொண்டு வந்துள்ளார். அதுவும் ரவா உப்புமாவை கொடுக்கிறார். மதுரையில் ரூ.80 கோடியில் கருணாநிதி பெயரில் நூலகம் அமைக்கப்படும் என்றனர். ஆனால் ரூ.80 கோடியில் இருந்து தற்போது ரூ.90 கோடி, ரூ.110 கோடி என்கிறார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
மக்கள் நலன் முக்கியமில்லை
கூட்டத்தில் நடிகை விந்தியா பேசும் போது,
மின் கட்டண உயர்வை எதிர்த்து அ.தி.மு.க போராடிக் கொண்டிருக்கிறது. மக்களுக்காக எந்த கட்சியும் குரல் கொடுக்கவில்லை. கம்யூனிஸ்டு, காங்கிரஸ் எங்கே போனது? தி.மு.க.வுக்கு மக்கள் நலன் முக்கியமில்லை. .அவர்களது மக்கள் நலம், வீட்டு நலம் முக்கியமாக இருக்கிறது. தி.மு.க. ஆட்சியில் விடியல் எங்கே? விடியல் இல்லை.அவர்களுக்கு மட்டும் தான் விடியல்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் பெரிய புள்ளான் எம்.எல்.ஏ. மாவட்ட துணைச்செயலாளர் ஓம்.கே.சந்திரன். எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி மாநில செயலாளர் கோ.பாரி, இலக்கிய அணி மாவட்ட செயலாளர் மோகன்தாஸ், எம்.ஜி.ஆர் மன்ற மாவட்ட துணைச் செயலாளர் கருத்தப்பாண்டி, பகுதி துணைச்செயலாளர் செல்வகுமார், கூட்டுறவு சங்க துணை தலைவர் ரகுபதி, பொதுக்குழு உறுப்பினர் மரக்கடை முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் நன்றி கூறினார்.