ரூ.5,600 கோடி ஊழலில் ஈடுபட்ட நிறுவனங்கள் எவை? அண்ணாமலை டுவிட்டர் பக்கத்தில் வீடியோ வெளியீடு


ரூ.5,600 கோடி ஊழலில் ஈடுபட்ட நிறுவனங்கள் எவை? அண்ணாமலை டுவிட்டர் பக்கத்தில் வீடியோ வெளியீடு
x

ரூ.5,600 கோடி ஊழலில் ஈடுபட்ட நிறுவனங்கள் எவை? என அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியிடம் நேற்று தி.மு.க. பைல்ஸ்-2 என்ற பெயரில் ஊழல் புகார்களை தெரிவித்தார். அதில் இருந்து 3 ஊழல்கள் குறித்து நேற்று வெளியிடப்பட்டது. மற்ற ஊழல்கள் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நடைபயணத்தின் போது வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஊழல் புகாரை கவர்னரிடம் வழங்கிய புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டதுடன், 3 ஊழல்கள் குறித்து அண்ணாமலை நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் 16 நிமிட வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

ஒளிரும் நாடா

தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையானது, வணிக பயன்பாடு வாகனங்களில் ஒளிரும் நாடாவை ஒட்டுவதற்கு குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு மட்டுமே சான்றிதழ் வழங்க அனுமதி அளித்துள்ளது. இதில் சென்னை நீலாங்கரையில் அமைந்துள்ளதாக கூறப்படும் நிறுவனம் போலியானது. ராஜபாளையத்தில் அமைந்துள்ள நிறுவனமும் போலியானது. இந்த நிறுவனங்கள் மூலம் வணிக பயன்பாடு வாகனங்களில் ஒளிரும் நாடா ஒட்டுவதன் மூலமும், பெரும்பாலான பணத்தை ஹவாலா முறையில் வினியோகித்து வரி ஏய்ப்பு செய்தது, போக்குவரத்து கருவிகள் வாங்கியதில் முறைகேடு என மொத்தம் ரூ.2 ஆயிரம் கோடிக்கு ஊழல் நடைபெற்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமைச்சரின் உதவியாளர் லஞ்ச வசூல் பணத்தை கேட்கும் ஆடியோ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.

பூச்சிக்கொல்லி மருந்து

இதே போன்று தமிழ்நாடு மருத்துவ கழகம் பூச்சிக்கொல்லி மருந்து வினியோகம் செய்ய தகுதியுள்ள ஒப்பந்ததாரர்கள் பட்டியலை வெளியிடுகிறது. அதில், உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள நிறுவனத்தின் ஏஜெண்ட் என பெயர் இடம் பெற்றுள்ளது. இது தொடர்பாக 2022 ஜூன் 15-ந் தேதி அந்த நிறுவனம் தமிழக அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதுகிறது. அதில், தங்கள் நிறுவனத்தின் 14.11.2018 அன்றைய தேதியிட்ட கடிதத்தை சில நிறுவனங்கள் தவறாக பயன்படுத்துகின்றன. தங்கள் நிறுவனம் வேறு எந்த நிறுவனத்துடனும் ஒப்பந்தம் செய்யவில்லை. தங்கள் நிறுவனம் பெயரிலான 25.08.2021 அன்றைய தேதியிட்ட வேறு நிறுவனங்களை அங்கீகரித்த கடிதம், அந்த கடிதத்தில் உள்ள முகவரி அனைத்தும் போலியானது. எனவே, தமிழ்நாடு மருத்துவ கழகம் தங்கள் நிறுவனம் பெயரில் 25.08.2021 அன்று போலி கடிதத்தை அடிப்படையாக கொண்டு வேறு நிறுவனங்களுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மோசடியில் ஈடுபட்டுள்ள 5 நிறுவனங்களின் பெயர்களை தெரிவித்து உள்ளது.

எனினும், இந்த 5 நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் மேலும் சில நிறுவனங்களின் பெயர்களில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கிய வகையில் ஆண்டுக்கு ரூ.300 கோடி வீதம் 2 ஆண்டுகளில் ரூ.600 கோடி ஊழல் நடைபெற்றுள்ளது.

அரசு நிறுவனம்

இதே போன்று தமிழக அரசின் துணை நிறுவனம் சார்பில் தொடங்கப்பட்ட அரசு நிறுவனத்தை ஒரு தனியார் நிறுவனத்துக்கு மாற்றியதன் வகையில் ரூ.3 ஆயிரம் கோடி ஊழல் நடைபெற்றுள்ளது என மொத்தத்தில் ரூ.5 ஆயிரத்து 600 கோடிக்கான ஊழல் பட்டியலை அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.


Next Story