பழைய வீட்டை இடிக்கும்போது இடிபாடுகளில் சிக்கி தொழிலாளி பலி
வேதாரண்யம் அருகே பழைய வீட்டை இடிக்கும்போது இடிபாடுகளில் சிக்கி தொழிலாளி பலியானார்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த தேத்தாக்குடி தெற்கு முடுக்கு வெளி பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவருக்கு சொந்தமான மாடி வீட்டின் பின்புறம் உள்ள ஓடு கட்டிட சமையலறை பழுதடைந்து இருந்துள்ளது. இந்த பழுதடைந்த கட்டிடத்தை, அகற்ற ஒப்பந்த அடிப்படையில், தோப்புத்துறை குப்பையன்காடு பகுதியை சேர்ந்த காமராஜ் என்பவர் கடந்த 2 நாட்களாக அதற்கான பணியை வேலையாட்களை வைத்து செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று 2 பேர் வேலைக்கு வந்து கட்டிடத்தை இடிக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர். அப்போது சுவர் இடிந்து விழுந்ததில் தோப்புத்துறை குப்பையன்காட்டை சேர்ந்த வெற்றி செல்வன் (43) என்பவர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் இதில் ஆறுகாட்டுத்துறையை சேர்ந்த வேதையன்(27) என்பவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த வேதாரண்யம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வெற்றி செல்வன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.