கோவிலுக்கு சென்று திரும்பியபோது மரத்தில் கார் மோதி விபத்து - வாலிபர் பலி


கோவிலுக்கு சென்று திரும்பியபோது மரத்தில் கார் மோதி விபத்து - வாலிபர் பலி
x

திருத்தணி கோவிலுக்கு சென்று திரும்பியபோது கார் மரத்தில் மோதி விபத்துக்கு உள்ளானதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோயிலுக்கு சாமி கும்பிட ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஜெகதீஷ் ஆச்சார்யா (வயது 50), அவரது மனைவி மாதவி ( 45), மகன் ரவி தேஜா (22), மகள் யாமினி (23), மற்றும் உறவினர்கள் வாணி (80), பிரியா (23) ஆகியோருடன் காரில் நேற்று புறப்பட்டு சென்றனர். அங்கு சாமி தரிசனம் முடித்துக் கொண்டு இவர்கள் ஆறு பேரும் காரில் தங்களது ஊருக்கு திரும்பி கொண்டு இருந்தனர்.

காரை ஜெகதீஷ் ஆச்சார்யா ஓட்டி வந்தார். அப்போது கார் ஆர் .கே. பேட்டை ஊராட்சி தாமரைக் குளம் அருகே கார் சென்றபோது ஜெகதீஷ் ஆச்சார்யா தூக்க கலக்கத்தில் சற்று கண் மூடிய போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் இருந்த ஆறு பேரும் பலத்த காயம் அடைந்தனர். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக ரவி தேஜாவை அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இவர் ஆந்திர மாநிலம் ஹைதராபாதில் தெலுங்கு குறும்படங்களை தயாரித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story