குளித்து கொண்டிருந்தபோது முல்லைப்பெரியாற்றில் அடித்து செல்லப்பட்ட ெதாழிலாளி
குளித்து கொண்டிருந்தபோது முல்லைப்பெரியாற்றில் தொழிலாளி அடித்து செல்லப்பட்டார்.
கூடலூர் 17-வது வார்டு சுல்லக்கரை ஓடை பகுதியைச் சேர்ந்தவர் சிவா (வயது 32). அதே பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம் (33). கட்டிட ெதாழிலாளர்கள். இவர்கள் இருவரும் கூடலூர் காஞ்சிமரத்துறை அருகே உள்ள முல்லைப்பெரியாற்றில் குளிக்கச் சென்றனர். ஆற்றில் இறங்கி இருவரும் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது சிவா ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இதை பார்த்த பரமசிவம் அவரை காப்பாற்ற முயன்றார். ஆனால் அவரால் முடியவில்லை. இதையடுத்து அவர் காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று அலறினார். இந்த சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து ஆற்றில் குதித்து சிவாவை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இதுகுறித்து லோயர்கேம்ப் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட சிவாவை தேடினர். பின்னர் இரவு நேரமானதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் செல்கிறது. மேலும் இன்று(வெள்ளிக்கிழமை) மீண்டும் தேடும் பணி நடைபெறும் என்று தீயணைப்பு படையினர் தெரிவித்தனர்.