தனிக்குடிநீர் திட்டம் கொண்டு வந்தது யார்? சேலம் மாநகராட்சி கூட்டத்தில் காரசார விவாதம்-அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு
தனிக்குடிநீர் திட்டம் தொடர்பாக சேலம் மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க. கவுன்சிலர்களிடையே காரசார விவாதம் நடந்தது. அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
மாநகராட்சி கூட்டம்
சேலம் மாநகராட்சி கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. துணை ஆணையாளர் அசோக்குமார், துணை மேயர் சாரதாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் விவரம் வருமாறு:-
44-வது வார்டு கவுன்சிலர் இமயவரம்பன்:- மாநகராட்சியின் தூய்மை பணிகள் தனியாருக்கு வழங்கப்படுவதாக தகவல் பரவி வருகிறது. அவ்வாறு தனியாருக்கு சென்றால் தூய்மை பணியாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். எனவே தூய்மை பணிகளை தனியாருக்கு விடும் முடிவை கைவிட வேண்டும். திருமணிமுத்தாறு ஓடையை தூர்வார வேண்டும். கூட்டத்தில் இனிமேல் தாழ்த்தப்பட்ட மக்கள் என்று அழைப்பதை கைவிட்டு பட்டியல் இன மக்கள் என்று அழைக்க வேண்டும்.
போலீசார் ரோந்து....
எதிர்க்கட்சி கொறடா செல்வராஜ்:- குடிநீர் இணைப்பு உள்ளிட்ட அவசர கால தேவைகளுக்கான முடிவெடுக்கும் அதிகாரத்தை அதிகாரிகளுக்கு வழங்க வேண்டும். பள்ளப்பட்டி ஏரியில் சிறப்பாக பணி நடைபெற்று வருகிறது. ஆனால் மதுவாங்கி சென்று அங்கு குடிப்பவர்களால் பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் மாநகராட்சி சார்பில் காவலாளிகள் நியமிப்பதுடன் போலீசார் ரோந்து செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சூரமங்கலம் மண்டல குழு தலைவர் கலையமுதன்:- கோடை காலம் தொடங்கி உள்ளதால் மாநகரில் குடிநீர் தட்டுப்பாடு இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனால் சீரான குடிநீர் வினியோகத்திற்கான ஆய்வு நடத்த எனது தலைமையில் குழு அமைக்கப்பட்டது. நங்கவள்ளி, தொட்டில்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தி சில பரிந்துரைகளை திட்டங்களாக நிறைவேற்ற அறிக்கை சமர்ப்பித்துள்ளோம். அதன் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சேலம் மாநகராட்சியில் கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வந்து செயல்படுத்தியது தி.மு.க. தான். ஆனால் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தனி குடிநீர் திட்டத்தை கண்டு கொள்ளப்படாததுடன் முறையாக நிதி ஒதுக்கீடும் செய்யப்படவில்லை.
(அப்போது அ.தி.மு.க. கவுசின்சிலர்கள் எழுந்து நின்று, தனிக்குடிநீர் திட்டம் தொடர்பாக மண்டல குழு தலைவர் கலையமுதன் தவறான தகவலை தெரிவிக்கிறார் என்றனர்.)
இதற்கு தி.மு.க. கவுசினர்கள் சிலர் எழுந்து நின்று, அவர் சரியாக தான் சொல்கிறார் என்றும், பேசும் போது குறுக்கீடு செய்ய வேண்டாம், உட்காருங்கள் என்றும் தெரிவித்தனர்.
வாக்குவாதம்-வெளிநடப்பு
இதனால் தி.மு.க., அ.தி.மு.க. கவுன்சிலர்களிடையே கடும் வாக்குவாதம், மோதல் ஏற்பட்டது. மேலும் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை மேயர் சமாதானப்படுத்தினார்.
ஆனால் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கூட்டத்தில் வெளிநடப்பு செய்தவதாக கூறிவிட்டு அங்கிருந்து வெளியே சென்றனர்.
இதையடுத்து கூட்டத்தில் கலையமுதன் தொடர்ந்து பேசும் போது, 'தவறான கருத்து கூறியதை நிரூபித்தால் நான் கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக உள்ளேன்' என்றார்.
ஆளுங்கட்சி தலைவர் ஜெயக்குமார்:- தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் மாநகராட்சியில் உள்ள சில அதிகாரிகள் தவறு செய்து வருகின்றனர். இதை வெளியே சொல்ல முடியாமல் கவுன்சிலர்கள் பலர் மனதில் வைத்து குமுறி வருகின்றனர். மேலும் அவர்கள் பொதுமக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எதிர்கொள்ள வேண்டியது உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடும் நடவடிக்கை
மேயர் ராமச்சந்திரன்:- மாநகராட்சியில் இனிமேல் தவறு நடந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேற்கண்டவாறு விவாதம் நடந்தது.
இதனிடையே வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி தலைவர் யாதவமூர்த்தி கூறும் போது, 'சேலம் மாநகருக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்கியவர் எடப்பாடி பழனிசாமி. இவர் தனிக்குடிநீர் திட்டத்துக்கு அ.தி.மு.க. ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சேலத்தில் மேடான பகுதி உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுத்தார்' என்றார்.