தண்டவாளத்தில் கற்களை அடுக்கி வைத்தது யார்?


தண்டவாளத்தில் கற்களை அடுக்கி வைத்தது யார்?
x
தினத்தந்தி 21 Jun 2023 12:15 AM IST (Updated: 21 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் அருகே தண்டவாளத்தில் கற்களை அடுக்கி வைத்தது யார் என்பது குறித்து ரெயில்வே போலீஸ் கமிஷனர் விசாரணை நடத்தினார்.

விழுப்புரம்

திண்டிவனம்:

திண்டிவனம் அடுத்த சிங்கனூரில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கருங்கல் வைக்கப்பட்டு இருந்தது. அந்த வழியாக வந்த ரெயில் சக்கரத்தில் சிக்கிய அந்த கல், சுக்கு நூறாக உடைந்தது.

இதேபோல் குறிப்பிட்ட சில இடங்களில் உள்ள தண்டவாளத்தில் மட்டும் ஜல்லி கற்களை வரிசையாக அடுக்கி வைப்பதும், அவற்றின் மீது ரெயில் செல்லும்போது உடைவதும் வாடிக்கையாகிவிட்டது. குறிப்பாக இதுபோன்ற நிகழ்வு காலையிலும், மாலையிலும் நிகழ்கிறது. ரெயில் மீது கல் வீச்சு சம்பவமும் நிகழ்ந்துள்ளது. இது குறித்து ரெயில் என்ஜின் டிரைவர்கள், ரெயில்வே போலீசாரிடம் புகார் தெரிவித்தனர்.

கமிஷனர் விசாரணை

இதையடுத்து ரெயில்வே போலீஸ் கமிஷனர் தாஸ் தலைமையிலான போலீசார் நேற்று நேரில் வந்து தண்டவாள பகுதியை பார்வையிட்டனர். மேலும் தண்டவாளத்தில் கற்களை அடுக்கி வைத்தது யார்? என்பது குறித்து அந்த பகுதியில் ஆடு, மாடு மேய்த்து கொண்டிருந்தவர்களிடமும், கிரிக்கெட் விளையாடியவர்களிடமும், கிராம மக்களிடமும் விசாரணை நடத்தினர்.

இதனை தொடர்ந்து சிங்கனூர் ஆதி திராவிடர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளுடன் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மணிமேகலை, செங்கல்பட்டு ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன், திண்டிவனம் இருப்பு பாதை சப்-இன்ஸ்பெக்டர் தேசி மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

நடவடிக்கை

கூட்டத்தில் ரெயில்வே போலீஸ் கமிஷனர் தாஸ் பேசியதாவது:-

ரெயில் மீது கல் வீசுவது, தண்டவாளத்தில் கருங்கற்களை வைப்பது உள்ளிட்ட செயல் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். சில மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடத்துக்கு வரும்போதும், பள்ளிக்கூடத்தில் இருந்து வீட்டுக்கு செல்லும்போதும் ரெயில்வே தண்டவாளத்தை பயன்படுத்துகிறார்கள். அவ்வாறு செல்லும்போது விளையாட்டாக கருங்கல் ஜல்லியை எடுத்து தண்டவாளத்தில் வைப்பார்கள். ரெயில் வேகமாக செல்லும்போது அந்த கல் சுக்கு நூறாக உடைந்து சிதறி புகையை கிளப்பும். இதை பார்த்து சிறுவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். இது தவறான செயலாகும். எனவே இந்த தவறுகளை நீங்கள் யாரும் செய்யக்கூடாது. இதுபோன்று வேறு யாரேனும் தவறு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


Next Story