நடராஜர் கோவில் யாருக்கு சொந்தம் என்கிற புத்தகம் விரைவில் வெளியீடுசிதம்பரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கி.வீரமணி பேச்சு
நடராஜர் கோவில் யாருக்கு சொந்தம் என்கிற புத்தகம் விரைவில் வெளியீடப்படும் என்று சிதம்பரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கி.வீரமணி பேசினாா்.
சிதம்பரம்,
சிதம்பரம் போல்நாராயணன் தெருவில் திராவிடர் கழகம் சார்பில் சமூகநீதி தொடர் பயண விளக்க பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் தலைமை தாங்கினார். தி.க. பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகர் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் அன்பு.சித்தார்த்தன் வரவேற்றார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ரா.முத்தரசன் வாழ்த்துரை வழங்கினார்.
கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகையில், தமிழகத்தில் இன்னும் சில கிராமங்களில் தேநீர் கடைகளில் இரட்டை குவளை முறை வழக்கத்தில் உள்ளது. ஆனால் மதுபானக்கடையில் இரட்டை குவளை முறை இல்லை. இரட்டை குவளை முறை நீக்கப்பட வேண்டும். அவைதான் சாதியை உயர்த்தி பிடித்து கொண்டிருக்கிறது.
யாருக்கு சொந்தம்?
சிதம்பரம் நடராஜர் கோவில் உண்மையில் யாருக்கு சொந்தம் என்று ஆராய்ச்சி நோக்கில் சான்றுகளுடன் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.ரே.ராஜன் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அந்த புத்தகம் சென்னை மற்றும் சிதம்பரத்தில் விரைவில் முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் வி.வி.சுவாமிநாதன் தலைமையில் வெளியிடப்படவுள்ளது.
சிதம்பரத்தின் மூத்த குடிமகனான முன்னாள் அமைச்சர் வி.வி.சுவாமிநாதன் 97-வது பிறந்தநாள் விழாவை சிதம்பரத்தில் கட்சி சார்பில் நடத்துவது என முடிவு செய்துள்ளோம் என்றார்.
இதில் காங்கிரஸ் கட்சி மாநில செயலாளர் பி.பி.கே.சித்தார்த்தன், ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் ஏ.என்.குணசேகரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநிலக்குழு உறுப்பினர் மணிவாசகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் பால.அறவாழி, தி.க. மாவட்ட இணை செயலாளர் யாழ்.திலீபன், தி.மு.க. நகரமன்ற உறுப்பினர் கே.அசோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ரா.பொய்யாமொழி நன்றி கூறினார்.