தொழிலாளியை கொன்றது ஏன்?- கைதான மகன் பரபரப்பு வாக்குமூலம்


தொழிலாளியை கொன்றது ஏன்?- கைதான மகன் பரபரப்பு வாக்குமூலம்
x

ஓமலூர் அருகே தொழிலாளியை செங்கல்லால் தாக்கி கொன்றது ஏன்? என்பது குறித்து கைதான மகன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

சேலம்

ஓமலூர்:

ஓமலூர் அருகே தொழிலாளியை செங்கல்லால் தாக்கி கொன்றது ஏன்? என்பது குறித்து கைதான மகன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

தொழிலாளி

ஓமலூர் அருகே உள்ள செல்லபிள்ளைகுட்டை பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 45). தொழிலாளி. இவருடைய மகன் கிருஷ்ணகுமார் (25). மாரியப்பனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி தந்தை, மகனுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் மாரியப்பன் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது தந்தைக்கும், மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த விஷ்ணுகுமார் அங்கிருந்த செங்கல்லை எடுத்து மாரியப்பனை தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த மாரியப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விஷ்ணுகுமார் தப்பி ஓடி விட்டார்.

கைது

இது குறித்த தகவல் அறிந்ததும் ஓமலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மாரியப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு செல்லப்பிள்ளை குட்டை அருகே பதுங்கி இருந்த விஷ்ணுகுமாரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனர்.

தொடர்ந்து அவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

எனது தந்தை மதுபோதையில் வீட்டுக்கு வந்து அம்மாவை அடித்து உதைப்பார். மேலும் குடும்பத்தில் உள்ளவர்களிடம் தினமும் சண்டை போடுவார். பலமுறை அறிவுரை கூறியும் கேட்பதில்லை.

செங்கல்லால் அடித்தேன்

மேலும் 13-ந் தேதி இரவு வீட்டுக்கு குடிபோதையில் வந்த எனது தந்தை மாரியப்பன் குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த நான் அருகே கிடந்த செங்கல்லை எடுத்து அவரது மண்டையில் பலமாக அடித்தேன். இதில் மண்டை உடைந்து ரத்தம் வெள்ளத்தில் மயங்கி விழுந்து இறந்தார். இதையடுத்து நான் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டேன். தலைமறைவாக இருந்த என்னை போலீசார் கைது செய்து விட்டனர்.

இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

தொடர்ந்து விஷ்ணுகுமாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story