பின்விளைவு பற்றி கவலைப்படாமல் கொடூர மனநிலைக்கு இளைஞர்கள் செல்வது ஏன்?-உத்தரவில் மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் விளக்கம்


பின்விளைவு பற்றி கவலைப்படாமல் கொடூர மனநிலைக்கு இளைஞர்கள் செல்வது ஏன்?-உத்தரவில் மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் விளக்கம்
x

உணர்வுபூர்வமான சவால்களை எதிர்கொள்ள முடியாமலும், பின்விளைவு பற்றி கவலைப்படாமலும் கொடூர மனநிலைக்கு இளைஞர்கள் செல்வது ஏன்? என்பது பற்றி, மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கருத்து தெரிவித்துள்ளனர்.

மதுரை

உணர்வுபூர்வமான சவால்களை எதிர்கொள்ள முடியாமலும், பின்விளைவு பற்றி கவலைப்படாமலும் கொடூர மனநிலைக்கு இளைஞர்கள் செல்வது ஏன்? என்பது பற்றி, மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கருத்து தெரிவித்துள்ளனர்.

காதலிக்க மறுத்த சிறுமி எரித்து கொலை

மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 26). ஏ.சி. மெக்கானிக். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

16.2.2018-ல் மாணவி பள்ளி முடிந்து தோழிகளுடன் வீட்டுக்குத் திரும்பிச் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் அங்கு வந்த பாலமுருகன் மாணவியை தடுத்து நிறுத்தி தன்னை காதலிக்குமாறு தகராறு செய்துள்ளார். பின்னர் மாணவி மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். இதில் உடல் முழுவதும் எரிந்து தீக்காயமடைந்த நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாணவி 27.2.2018 அன்று உயிரிழந்தார். இதையடுத்து பாலமுருகனை போலீசார் கைது செய்தனர்.

ஆயுள் தண்டனை

இந்த வழக்கில் பாலமுருகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை மாவட்ட மகளிர் கோர்ட்டு 26.9.2019-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை ரத்து செய்யக்கோரி பாலமுருகன் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் நிஷாபானு, ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் விசாரித்து பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

காதலை ஏற்க மறுத்த மாணவி உலகில் இருக்கக் கூடாது, வேறு யாருடனும் வாழக் கூடாது என முடிவு செய்து கொலை செய்யும் முடிவுக்கு மனுதாரர் வந்துள்ளார்.

உணர்ச்சி வசப்படுகின்றனர்

பெண்களுக்கு தனது விருப்பத்தை முடிவு செய்ய உரிமை உண்டு. இதை புரியாமல் கட்டாயப்படுத்தி தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஆண்கள் நினைக்கின்றனர்.

இந்தக்கால இளைஞர்கள் சுலபமாக உணர்ச்சி வசப்படுகின்றனர். அவர்களின் எதிர்பார்ப்புகள் மறுக்கப்படும்போது, பின்விளைவுகளை பற்றி கவலைப்படாமல் கொடூர மன நிலைக்குச் செல்கின்றனர்.

இதனால் நமது கல்வி முறையில் நுண்ணறிவு அளவுகோலை காட்டிலும், உணர்வுபூர்வமான அளவுகோலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

அதை செய்யத் தவறினால் ஒரு இளைஞர் எவ்வளவு தான் திறமையானவராகவோ, வெற்றியாளராகவோ இருந்தாலும் அவரால் உணர்வுபூர்வமான சவால்களை எதிர்கொள்ள தயாராக முடியாது.

தண்டனை உறுதி

இந்த வழக்கில் மனுதாரர் மீதான குற்றச்சாட்டை அரசு தரப்பு சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபித்துள்ளது. இதனால் மனுதாரர் சம்பந்தப்பட்ட கீழ் கோர்ட்டின் தீர்ப்பில் தலையிட முகாந்திரம் இல்லை. கீழ் கோர்ட்டு பிறப்பித்த தீர்ப்பு உறுதி செய்யப்படுகிறது. இந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


Related Tags :
Next Story