இந்த ஆண்டு ஒரு வாரத்துக்கு மேலாக கடல்நீர் பச்சையாக காட்சி அளிப்பது ஏன்?
மண்டபம் உள்ளிட்ட இடங்களில் இந்த ஆண்டு ஒரு வாரத்துக்கு மேலாக கடல்நீர் பச்சையாக காட்சி அளிப்பது ஏன்? என விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.
பனைக்குளம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் மன்னார் வளைகுடாவில் கரையோர கடல் பகுதி கடந்த ஒரு வாரமாக பச்ைச நிறமாக மாறி இருக்கிறது. ஆனால், கடந்த ஆண்டுகளில் இதுபோன்று பச்சை நிறமானால் ஒன்றிரண்டு நாட்களில் கடல் இயல்பு நிலைக்கு மாறிவிடும். ஆனால், இந்த ஆண்டு, மண்டபம் முதல் மரைக்காயர் பட்டினம், வேதாளை, புதுமடம் வரையிலான கடல் பகுதி ஒரு வாரத்திற்கு மேலாகவே பச்சை நிறமாகவே காட்சி அளிக்கிறது.
இதனால் பாதிப்புகள் ஏதும் வரக்கூடுமா? என்பது பற்றி மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் கூறுகையில், "4-வது ஆண்டாக இந்த ஆண்டும் மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் நாட்டிலூகா எனப்படும் கண்ணுக்கு தெரியாத பச்சை பாசிகள் படர்ந்துள்ளன. வழக்கமாக இது போன்று கடலில் பச்சை பாசிகள் படர்ந்தால் 2 அல்லது 3 நாட்களில் தானாகவே கடல் அலை மற்றும் காற்றின் வேகத்தால் கரை ஒதுங்கி அழிந்து விடும். ஆனால் இந்த ஆண்டு தொடர்ந்து ஒரு வாரத்திற்கு மேலாகவே பச்சை பாசிகள் அதிக அளவில் படர்ந்து காணப்பட்டு வருகின்றன. இதனால் மீன்களுக்கு பாதிப்புகள் உள்ளதா? என்பது குறித்து தொடர்ந்து கடல் நீரை பார்வையிட்டு ஆய்வு நடத்தி வருகிறோம். அதே நேரம் கரையோர கடல் பகுதியில் சில மீன்கள் இறந்துள்ளன. பச்சை பாசியால் ஆழ்கடலை நோக்கி பெரும்பாலான மீன்கள் இடம்பெயர்ந்துவிட்டன, என்றார்கள்.