தமிழக அரசு கொண்டு வரும் மக்கள் ஐ.டி. திட்டம் ஏன்?-அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி
தமிழக அரசு கொண்டுவர உள்ள ‘மக்கள் ஐ.டி.’ திட்டம் எதற்காக? என்பது குறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம் அளித்தார்.
தமிழக அரசு கொண்டுவர உள்ள 'மக்கள் ஐ.டி.' திட்டம் எதற்காக? என்பது குறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம் அளித்தார்.
வாட்ஸ்-அப் சேவை
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த புத்தொழில் மற்றும் மென்பொருள் நிறுவன நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு தமிழக தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் விஷ்ணு, அப்துல் வகாப் எம்.எல்.ஏ., துணை மேயர் ராஜூ, பயிற்சி உதவி கலெக்டர் கோகுல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அப்போது மாவட்ட நிர்வாகம் சார்பில், தமிழக அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில் சேவை என்ற பெயரில் `வாட்ஸ்-அப்' சேவை திட்டத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
தமிழகம் முன்னோடி
தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த அரசின் மின் ஆளுமை திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதில் மற்ற மாநிலங்களுக்கு தமிழ்நாடு முன்னோடியாக விளங்கி வருகிறது.
தமிழக முதல்-அமைச்சர் எல்ேலாருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில், தமிழகத்தில் கடைக்கோடியில் வாழ்கிற ஏழை-எளிய, நடுத்தர மக்கள் அரசின் திட்டங்களைத் தெரிந்துக்கொண்டு பயன்பெற வேண்டும் என்ற எண்ணத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
கலந்துரையாடல்
அதனைத்தொடர்ந்து, புத்தொழில் கண்டுபிடிப்பாளர்கள், முதலீட்டாளர்கள், பொறியியல் கல்லூரி மாணவர்கள், மென்பொருள் நிறுவனத்தினர் ஆகியோருடன் துறை ரீதியான வளர்ச்சி குறித்து கலந்துரையாடினார்.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சுரேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் (ஒழுங்கு நடவடிக்கை ஆணையர்) சுகன்யா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
'மக்கள் ஐ.டி.'
தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்கள் தகுதியான நபர்களுக்கு எளிதாகவும், விரைவாகவும் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் தகவல் தொழில்நுட்பத்துறையின் மூலம் 12 இலக்க எண்ணுடன் மாநில குடும்ப தரவுத்தளம் 'மக்கள் ஐ.டி.' என்ற திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த தரவுத்தளம் திட்டம் மக்கள் ஐ.டி. கொண்டு வருவதன் மூலம் அரசின் திட்டங்கள் தகுதியான நபர்களுக்கு சென்றடைவதை உறுதி செய்ய முடியும். இந்த மக்கள் ஐ.டி. திட்டம் மத்திய அரசின் ஆதார் எண்ணுக்கு போட்டியாக தொடங்கப்படவில்லை. நாங்கள் எதற்காக போட்டிப்போட வேண்டும்?
இ-சேவை மையம்
இ-சேவை 2.0 திட்டத்தின் மூலமாக அனைத்து இ- சேவை மையங்களும் மேம்படுத்தப்படும். கடந்த ஒரு ஆண்டில் தகவல் தொழில்நுட்பம் 18 சதவீதம் வளர்ச்சி அடைந்து உள்ளது. தமிழகத்தில் மென்பொருள் நிறுவனம் அமைப்பதற்காக 68.80 ஏக்கர் நிலம் எல்காட் நிறுவனம் மூலம் வழங்கப்பட்டுள்ளது. இதில், நெல்லை மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்டான் தொழில்நுட்ப பூங்காவில் ஒரே நிறுவனத்திற்கு தொழில் தொடங்க 9 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது. தென்மாவட்டத்தில் விரைவில் தகவல் தொழில்நுட்பத்துறை தொழில்முனைவோர்கள் மாநாடு நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.