கோவை கார் வெடிப்பு : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மவுனம் சாதிப்பது ஏன்? - ஜெயக்குமார் கேள்வி
கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாய் திறக்காமல் இருக்கிறார். இதுவொரு கண்டனத்திற்குரிய விஷயம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை,
சென்னையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பசும்பொன் முத்துராமலிங்கம் பிறந்தநாளன்று சென்னை நந்தனத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படவுள்ளது. அதற்காக உரிய அனுமதியும், பாதுகாப்பும் அளிக்க வேண்டும் என்று காவல்துறையினரிடம் கோரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாய் திறக்காமல் இருக்கிறார். இதுவொரு கண்டனத்திற்குரிய விஷயம். தற்கொலை தாக்குதலை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏற்கனவே கோவையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் 58 பேர் உயிரிழந்தனர். இதனால் 4 நாட்களுக்கு மேலாக மவுனம் காப்பது கண்டனத்திற்குரியது.
ஆறுமுகசாமி விசாரணை அறிக்கை தொடர்பாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் போதுமான விளக்கத்தை அளித்துவிட்டார்.
ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான அனைத்து விவகாரத்திற்கும் ஓபிஎஸ் மற்றும் சசிகலா ஆகியோர் மட்டுமே பொறுப்பு. ஏனென்றால் ஓபிஎஸ்-க்கு அப்போது முதல்-அமைச்சரின் அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட்டன. இவர்கள் இருவரும் குற்றம் செய்தவர்கள் என்று தான் விசாரணை அறிக்கையின் முடிவு இருக்கிறது. விசாரணை அறிக்கையின் கடைசியில் இடம்பெற்ற திருக்குறளை பார்த்து, நாடே கண்ணீர் சிந்தக் கூடிய நிலைதான் இருக்கிறது என்று தெரிவித்தார்.
பத்திரிகையாளர் முத்துகிருஷ்ணன் இறப்பிற்கு 5 லட்சம் கொடுத்தது போதாது,உயிரிழந்த செய்தியாளர் வாழ்நாள் முழுவதும் எவ்வளவு சம்பளம் வாங்குவாரோ, அதை அரசு வழங்க வேண்டும்.இல்லையென்றால் அவரது குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
இரவு,பகல் பாராமல் பாடுபடும் ஊடக நண்பர்களுக்கு பாதுகாப்பு இல்லை.
இந்த சம்பவத்திற்கு காண்ட்ராக்டர் உட்பட யார் காரணமாக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். செய்தியாளர் இறப்பிற்கு 5 லட்சம் கொடுத்தது போதாது. உயிரிழந்த செய்தியாளர் வாழ்நாள் முழுவதும் எவ்வளவு சம்பளம் வாங்குவாரோ, அதை அரசு வழங்க வேண்டும். இல்லையென்றால் அவரது குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
ஆந்திராவில் தமிழக மாணவர்கள் மீது நடத்திய தாக்குதல் குறித்து கண்டனத்தை தெரிவிக்க வேண்டும். தமிழர்களை தாக்கியதற்கு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆனால் முதலமைச்சர் இதுவரை வாய் திறக்கவில்லை என கூறினார்.