தமிழகத்தில் நாளை முதல் 5 நாட்களுக்கு பரவலாக கனமழை பெய்யக்கூடும்
வங்க கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் நாளை முதல் 5 நாட்களுக்கு பரவலாக கனமழையும், சில இடங்களில் மிக கனமழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தென் மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, இன்றோ (புதன்கிழமை) அல்லது நாளையோ (வியாழக்கிழமை) அதே இடத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகக்கூடும் என்றும், அது அடுத்த 24 மணி நேரத்தில் வட மேற்கு திசையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்றும் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் 14-ந் தேதி (திங்கட்கிழமை) வரை 5 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் அனேக இடங்களில் மிதமான மழையும், பரவலாக கனமழையும், சில இடங்களில் மிக கனமழையும் பெய்யக்கூடும்.
மிக கனமழை பெய்யும் இடங்கள்
அதிலும் குறிப்பாக, நாளை ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராமநாதபுரம், கரூர், தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
ஆரஞ்சு அலர்ட்
வருகிற 12-ந் தேதி (சனிக்கிழமை) நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். மேற்சொன்ன 2 நாட்களில் மிக கனமழை பெய்யக்கூடிய இடங்களுக்கு நிர்வாக ரீதியாக 'ஆரஞ்சு அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிகள், தமிழக கடலோர பகுதிகள், தென்மேற்கு மற்றும் அதனையொட்டி மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகள் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 55 கி.மீ. வரையிலான வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் நாளையும், நாளை மறுதினமும் மேற்சொன்ன பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் ஆய்வு மையத்தால் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
மழை அளவு
நேற்று காலையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு வருமாறு:-
சென்னை நுங்கம்பாக்கம் 6 செ.மீ., திருக்குவளை 5 செ.மீ., மாமல்லபுரம், திருப்போரூர் 4 செ.மீ., அண்ணாமலை நகர், கடவனூர், சிதம்பரம், சிவகிரி, தண்டையார்பேட்டை, தாம்பரம், பரங்கிப்பேட்டை, மயிலாடி, திருக்கழுக்குன்றம், கொள்ளிடம், டி.ஜி.பி. அலுவலகம், ராதாபுரம், சென்னை கலெக்டர் அலுவலகம் தலா 3 செ.மீ. உள்பட சில இடங்களில் மழை பெய்துள்ளது.
சென்னையில் மிக கனமழை பெய்யும்
தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு
கடந்த மாதம் (அக்டோபர்) 29-ந் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக கடந்த 31-ந் தேதி முதல் தொடர்ந்து 4 நாட்களுக்கு சென்னை உள்பட தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. இது பருவமழைகாலத்தின் முதல் மழைப்பொழிவாக பார்க்கப்பட்டது. அந்த 4 நாட்களில் சென்னையில் மட்டும் சராசரியாக 27 செ.மீ. மழை பதிவாகியிருந்தது. அதன் பின்னரும், தமிழகத்தில் மழை ஆங்காங்கே பெய்தது.
அதன் தொடர்ச்சியாக தற்போது வங்க கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் 11-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை மீண்டும் சென்னை உள்பட தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்த பருவமழை காலத்தின் 2-வது பெரிய மழைப்பொழிவு ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக இந்த நாட்களில் வட தமிழக கடற்கரையின் அனைத்து இடங்களிலும் மழை இருக்கும் என்றும், அதிலும் சென்னையில் மிக கனமழை இருக்கும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தன்னுடைய சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.