அரியலூர் மாவட்டத்தில் பரவலாக மழை
அரியலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.
அரியலூர் மாவட்டத்தில் கடந்த வாரம் மாவட்டம் முழுவதும் விவசாயம் செய்வதற்கு தேவையான அளவிற்கு பரவலாக மழை பெய்தது. இதைத்தொடர்ந்து மாவட்ட பகுதிகளில் மானாவாரி பயிர்களான நெல், மக்காச்சோளம், பருத்தி, கேழ்வரகு, கம்பு, சோளம், வேர்க்கடலை ஆகியவற்றை விதைப்பதற்கான பணிகள் தொடங்கின. மாவட்டம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை உழுது, உரங்கள் தூவி, நிலத்தை சமன் செய்து தயார் நிலையில் வைத்திருந்தனர். நேற்று முன்தினம் மாவட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. தற்போது பெய்த மழையால் ஆடிப்பட்டத்தில் பயிர்கள் விதைக்கும் பணி தொடங்கியுள்ளது. இந்நிலையில் அரியலூரில் நேற்று மாலை வானில் கருமேகங்கள் திரண்டன. இதனால் வானம் மப்பும், மந்தாரமுமாக காணப்பட்டது. இதையடுத்து தூறலாக மழை பெய்தவாறு இருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு பருவத்திற்கு மழை பெய்து நல்ல மகசூல் கிடைக்கும் என்று விவசாயிகள் நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.