கரூர் மாவட்டத்தில் பரவலாக மழை


கரூர் மாவட்டத்தில் பரவலாக மழை
x

கரூர் மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கரூர்

பரவலாக மழை

கரூரில் கடந்த சில தினங்களாக பனிப்பொழிவு இருந்தது. இந்நிலையில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டமாக இருந்தது. இந்நிலையில் மதியம் 1.30 மணியளவில் மழை பெய்ய ஆரம்பித்தது. இந்த மழையானது கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்போது விட்டுவிட்டு பெய்து கொண்டே இருந்தது. (இதனால் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் அவதியடைந்தனர்.) சிலர் குடைப்பிடித்து சென்றதையும் காண முடிந்தது. இந்த மழையால் கரூரில் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

நொய்யல்

நொய்யல், தவிட்டுப்பாளையம், நன்செய் புகழூர், புன்னம் சத்திரம், திருக்காடுதுறை, முத்தனூர், வேட்டமங்கலம், குளத்துப்பாளையம், மரவாபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று பகல் 12 மணி முதல் பலத்த மழை பெய்தது. இதனால் சாலையோர கடைக்காரர்கள் வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். சாலையில் இருசக்கர வாகனங்களில் சென்றவர்களும், நடந்து சென்ற கூலித் தொழிலாளர்களும் நனைந்து கொண்டு சென்றனர். வாகனங்களில் சென்றவர்கள் முன் விளக்கை எரிய விட்டு சென்றனர். மழையின் காரணமாக சாலையில் இருபுறமும் உள்ள குழிகளில் மழைநீர் தேங்கி நின்றன.

வெள்ளியணை

வெள்ளியணை பகுதியில் நேற்று பரவலாக மழை பெய்தது. இந்தநிலையில் காணியாளம்பட்டி, செல்லாண்டிபுரம், ஜெகதாபி, பொரணி, உப்பிடமங்கலம், மணவாடி, கத்தாளப்பட்டி, வெள்ளியணை, விஜயபுரம், மூக்கணாங்குறிச்சி, கே பி தாழைப்பட்டி, பாகநத்தம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் நேற்று முன் தினம் மாலை தூறல் மழை பெய்த நிலையில், நேற்று காலையில் இருந்து இந்த பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனைத்தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் ஆடு மாடுகளை மேய்ச்சலுக்கு விட முடியாமல் விவசாயிகள் கவலைப்பட்டனர்.

வேலாயுதம்பாளையம்

வேலாயுதம்பாளையம், கந்தம்பாளையம், காகிதபுரம், செக்குமேடு, மூர்த்திபாளையம், புகழூர், நாணப்பரப்பு, தோட்டக்குறிச்சி, அய்யம்பாளையம், தளவாப்பாளையம், மண்மங்கலம் ஆகிய பகுதிகளில் நேற்று காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை பரவலாக மழை பெய்தது. இதனால் பலர் குடைப்பிடித்து கொண்டு சென்றதை காண முடிந்தது. இந்த மழையால் விவசாயிகள் பலர் வேலைக்கு செல்லவில்லை. மேலும் மழையால் சாலையோரங்களில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றன.

இதேபோல் கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று பரவலமாக மழை பெய்தது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Related Tags :
Next Story