கரூரில் 2-வது நாளாக பரவலாக மழை
கரூரில் 2-வது நாளாக பரவலாக மழை பெய்தது.
கரூரில் கடந்த சில நாட்களாக வெயில் தாக்கம் அதிகமாக இருந்து வருவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை சுமார் அரைமணி நேரம் கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் கரூரில் நேற்று காலை முதலே மீண்டும் வெயில் கொளுத்தியது. இந்நிலையில் நேற்று இரவு சுமார் 7.15 மணியளவில் திடீரென மழை பெய்ய ஆரம்பித்தது. இந்த மழையானது கரூர், தாந்தோன்றிமலை, பசுபதிபாளையம், வெங்கமேடு, காந்திகிராமம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேல் பெய்தது. இதனால் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் நனைந்து கொண்டே சென்றதை காணமுடிந்தது. பலர் குடைபிடித்து சென்றனர். இந்த திடீர் மழையால் கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.