மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக மழை
மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக சீர்காழியில் 40 மி.மீ. பதிவானது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக சீர்காழியில் 40 மி.மீ. பதிவானது.
பனிப்பொழிவு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கனமழை பெய்தது. கடந்த 11-ந் தேதி சீர்காழியில் 44 செ.மீ. மழை பெய்தது. இது தமிழகத்திலேயே அதிக மழைப்பொழிவு என்று வானிலை மையம் தெரிவித்தது. இதனால் வயல்களில் தண்ணீர் தேங்கி நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன.இதை தொடர்ந்து மழை நின்றதால் வயல்களில் தேங்கியிருந்த தண்ணீர் வடிந்து வந்தது. பகலில் வெயில் சுட்டெரித்தாலும், இரவில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது.
பரவலாக மழை
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று மதியம் முதல் பரவலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. சீர்காழியில் அதிகபட்சமாக 40 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.மாவட்டத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:- சீர்காழி-40, கொள்ளிடம்-31, மயிலாடுதுறை-26, மணல்மேடு-19, செம்பனார்கோவில்-5, தரங்கம்பாடி-1.