நாகை மாவட்டத்தில் பரவலாக மழை
நாகை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. வேதாரண்யத்தில் மின்சாரம் தாக்கி 4 ஆடுகள் இறந்தன.
நாகை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. வேதாரண்யத்தில் மின்சாரம் தாக்கி 4 ஆடுகள் இறந்தன.
வடகிழக்கு பருவமழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. இது தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து தமிழகம் நோக்கி இன்று (சனிக்கிழமை) நகர்ந்து வரக்கூடும் என்றும், இதன் காரணமாக தமிழகத்தில் நேற்று 3 நாட்கள் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அதன்படி நாகையில் நேற்று முன்தினம் இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்வி கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது.
நேற்று அதிகாலையில் மழை விட்டு விட்டு பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.மேலும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
சாலையில் தேங்கிய தண்ணீர்
குறிப்பாக நாகையில் இருந்து அக்கரைபேட்டை வழியாக வேளாங்கண்ணிக்கு செல்லக்கூடிய பிரதான சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. லேசான மழை பெய்தாலே சாலைகள் தெரியாத அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது.கடந்த 2 நாட்களாக பெய்த மழையால் இந்த பகுதியில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு மிகுந்த சிரமம் அடைந்தனர்.
இதை தொடர்ந்து ஊரக வளர்ச்சித் துறையினர் மின்மோட்டார் என்ஜின் கொண்டு மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.. ஒவ்வொரு ஆண்டும் மழை பெய்யும் போது இந்த பகுதிகளில் மழைநீர் தேங்குவதால் வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மின்சாரம் தாக்கி ஆடுகள் சாவு
வேதாரண்யம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு தொடங்கிய மழை நேற்று காலை 9 மணி வரை 12 மணி நேரம் பெய்தது. இந்த மழையால் பொதுமக்கள் வெளியே வராமல் வீடுகளிலேயே முடங்கி கிடந்தனர்.
வேதாரண்யம் வனதுர்க்கை அம்மன் கோவில் அருகே ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது காற்று வீசியதால் அந்த பகுதியில் உள்ள பனை மரத்தில் இருந்து மட்டைகள் மின்கம்பி மீது விழுந்தது. இதனால் மின்கம்பி அறுந்து மேய்ந்து கொண்டுடிருந்த 4 ஆடுகள் மீது விழுந்தது. இதில் 4 ஆடுகளும் மின்சாரம் தாக்கி இறந்தன.
மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
கடல்சீற்றம் காரணமாக கோடியக்கரை, ஆறுகாட்டுதுறை, வெள்ளப்பள்ளம் புஷ்பவனம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த 5 ஆயிரம் மீனவர்கள் ேநற்று 4-வது நாளாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. மீனவர்கள் தங்கள் படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளை கரையில் இருந்து சற்று தொலைவில் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.
தொடர் மழையால் குளம், குட்டை, ஏரிகள் நிரம்பி வருகின்றன. நகராட்சி பகுதியில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடாக வாய்க்கால் தூர்வாரப்பட்டதால் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்காமல் வடிந்துள்ளது. வாய்கால்களில் உடைப்பு ஏற்பட்டால் சரி செய்ய மணல் மூட்டைகள் தயார் நிலையில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன.
ஆகாய தாமரைகளை அகற்ற அறிவுறுத்தல்
வேதாரண்யம் கோட்டாட்சியர் ஜெயராஜ் பவுலின் பிராந்தியங்கரை பகுதிகளுக்கு சென்று அங்குள்ள மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். பின்னர் வடிகால், ஆறுகளில் உள்ள ஆகாய தாமரை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினருக்கு அறிவுறுத்தினர்.
இதேபோல நாகூர், திட்டச்சேரி, திருமருகல், சிக்கல், கீழ்வேளூர், வேளாங்கண்ணி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.