நெல்லையில் 2-வது நாளாக பரவலாக மழை; பொதுமக்கள் மகிழ்ச்சி
நெல்லையில் நேற்று 2-வது நாளாக பரவலாக மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நெல்லையில் நேற்று 2-வது நாளாக பரவலாக மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
2-வது நாளாக...
நெல்லை, தென்காசி, நீலகிரி, காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் 2 நாட்கள் மழைபெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று முன்தினம் மழை பெய்தது. இதில், நாங்குநேரி, மூைலக்கரைப்பட்டி, நெல்லை, பாளையங்கோட்டை, களக்காடு பகுதிகளில் பலத்த மழை கொட்டியது.
தொடர்ந்து நேற்று 2-வது நாளாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. நெல்லை, பாளையங்கோட்டை பகுதிகளில் மதியம் அரைமணி நேரம் பலத்த மழை கொட்டியது. இதனால் சாலைகளில் மழைநீர் குளம்போல் ஆங்காங்கே தேங்கி கிடந்தது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள அணை பகுதிகளான மணிமுத்தாறு, சேர்வலாறு, கொடுமுடியாறு உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது.
பொதுமக்கள் மகிழ்ச்சி
நெல்லை மாநகர பகுதியில் பெய்த மழையின் காரணமாக பேட்டை செக்போஸ்ட் முதல் தொண்டர் சன்னதி வரையிலான சாலைகளில் பள்ளங்களிலும் தண்ணீர் தேங்கியது. இதனால் தொண்டர் சன்னதி சாலையில் சென்ற வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன.
நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ் பகுதி, கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கி கிடந்தது.
சேரன்மகாதேவி, நாங்குநேரி, நெல்லை, ராதாபுரம், களக்காடு உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது.
மாவட்டம் முழுவதும் கடந்த சில வாரங்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மழை அளவு
நேற்று காலை நிலவரப்படி மாஞ்சோலை மலைப்பகுதியில் 12 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக நாங்குநேரியில் 70 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
ராதாபுரத்தில் 15 மில்லி மீட்டரும், பாளையங்கோட்டையில் 45 மில்லி மீட்டரும், நெல்லையில் 35 மில்லி மீட்டரும், களக்காட்டில் 23 மில்லி மீட்டரும், மூலைக்கரைப்பட்டியில் 11 மில்லி மீட்டரும், கொடுமுடியாறு அணைப்பகுதியில் 22 மில்லி மீட்டர் மழையும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள நாலுமுக்கில் 8 மில்லிமீட்டரும், மாஞ்சோலையில் 12 மில்லி மீட்டரும், காக்காச்சி, ஊத்து பகுதியில் தலா 8 மில்லி மீட்டர் மழை அளவும் பதிவாகி உள்ளது.