நெல்லையில் பரவலாக மழை
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
பலத்த மழை
நெல்லை மாநகர பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை கொட்டியது. இந்த நிலையில் நேற்று காலை வெயில் அடித்தது. பின்னர் வானம் மேகமூட்டமாக காட்சி அளித்தது. அவ்வப்போது சாரல் மழை பெய்தது.
இதனால் நெல்லையில் இதமான சூழல் நிலவியது. இதேபோன்று மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. தென்காசி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.
அணைகளுக்கு நீர்வரத்து
தொடர் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது. பாபநாசம் அணை நீர்மட்டம் 86.25 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 411 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து நேற்று முதல் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 98 அடியாக உள்ளது.
மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 71.30 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 61 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 52 அடி உயரம் கொண்ட கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 48.50 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு வருகிற 2 கன அடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.
தென்காசி மாவட்டம்
தென்காசி மாவட்டத்தில் உள்ள கடனாநதி அணை நீர்மட்டம் 54 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 30 கன அடியாகவும், வெளியேற்றம் வினாடிக்கு 40 கன அடியாகவும் உள்ளது. ராமநதி அணை நீர்மட்டம் 58.75 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு வருகிற 30 கன அடி தண்ணீர் அப்படியே பாசனத்துக்கு வெளியேற்றப்படுகிறது.
கருப்பாநதி அணை நீர்மட்டம் 49.87 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5 கன அடியாகவும், வெளியேற்றம் 25 கன அடியாகவும் உள்ளது. 36 அடி உயரம் கொண்ட குண்டாறு அணை நீர்மட்டம் 33.50 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4 கன அடியாகவும், வெளியேற்றம் 3 கன அடியாகவும் உள்ளது. அடவிநயினார் அணை நீர்மட்டம் 84.75 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 40 கன அடி தண்ணீர் அப்படியே பாசனத்துக்கு திறந்து விடப்படுகிறது.
பள்ளி சுவர் இடிந்தது
இதற்கிடையே பாவூர்சத்திரம் அருகே மழைக்கு பள்ளி சுற்றுச்சுவர் இடிந்தது. பாவூர்சத்திரம் அருகே அயன்குறும்பலாபேரியில் யூனியன் தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ளது. இதில் 110 மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர். நேற்று முன்தினம் மாலையில் பாவூர்சத்திரம் குறும்பலாபேரி பகுதிகளில் கனத்த மழை பெய்தது. அப்போது இந்த பள்ளியின் பின்புறம் வாறுகால் அருகே உள்ள பள்ளி சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிந்து அருகிலுள்ள சாக்கடை வாறுகாலுக்குள் விழுந்தது.
இதனைத்தொடர்ந்து நேற்று இந்த பள்ளி மாணவ- மாணவிகள் அனைவரும் அங்குள்ள பத்திரகாளியம்மன் கோவில் அருகே உள்ள அரசு நடுநிலைப்பள்ளிக்கு அழைத்து சென்று அமர வைக்கப்பட்டனர்.
மழை அளவு
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
சேர்வலாறு-15, நம்பியாறு-47, கொடுமுடியாறு-6, அம்பை-3, ராதாபுரம்-8, நாங்குநேரி-62, களக்காடு-16, மூலைக்கரைப்பட்டி-17, பாளையங்கோட்டை-41, நெல்லை-5, குண்டாறு-2, அடவிநயினார்-15, ஆய்க்குடி -5, செங்கோட்டை-1, தென்காசி-4, சங்கரன்கோவில்-14, சிவகிரி-37.