நெல்லையில் பரவலாக மழை
நெல்லையில் பரவலாக மழை பெய்தது.
நெல்லையில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
3-வது நாளாக மழை
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்தது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக காலையில் வெயில் தாக்கமும், மாலையில் மழையும் பெய்து வருகிறது.
நேற்றும் காலையில் வெயில் அடித்தது. மாலை 4 மணி அளவில் மேக கூட்டங்கள் சேர்ந்து இடி, மின்னலுடன் மழை பெய்தது. நெல்லை சந்திப்பு, பாளையங்கோட்டை, தச்சநல்லூர், மேலப்பாளையம் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதே போல் மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக பாபநாசம் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
மூலைக்கரைப்பட்டி, வடக்கு விஜயநராயணம், காரியாண்டி, இட்டமொழி, பரப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வானப்பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. காரியாண்டி பகுதியில் 4 இடங்களில் மின்கம்பம் முறிந்து விழுந்ததால் மின்சாரம் தடைபட்டுள்ளது. மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பத்தை சரி செய்து மின்சப்ளை கொடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மழை விவரம்
நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
பாபநாசம் -14, சேர்வலாறு -6, சேரன்மாதேவி -2, நாங்குநேரி -36, களக்காடு -1, மூலைக்கரைப்பட்டி -15.
கடனாநதி அணை -3, ராமநதி -16, கருப்பாநதி -4, குண்டாறு -5, அடவிநயினார் -1, ஆய்க்குடி -4, செங்கோட்டை -2, தென்காசி -46, சங்கரன்கோவில் -5, சிவகிரி -15.
நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக நாங்குநேரியில் 36 மில்லி மீட்டரும், தென்காசி மாவட்டத்தில் தென்காசியில் 46 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது.