மாவட்டத்தில் பரவலாக மழை
கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. 13 குடிசை வீடுகள் இடிந்து விழுந்து சேதமானது.
மழை
கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி பெய்து வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. நெல், வாழை உள்ளிட்ட பல்வேறு வயல்களிலும் தண்ணீர் தேங்கி உள்ளது. அந்த நீரை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதியில் அடுத்த காற்றழுத்த சுழற்சி பகுதியான நாளை மறு நாள் (புதன்கிழமை) உருவாக கூடும், அது தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரை நோக்கி 11,12-ந்தேதிகளில் நகரக்கூடும். இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும், குறிப்பாக கடலூர், செங்கல்பட்டு, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
13 குடிசை வீடுகள் சேதம்
அதன்படி கடலூரில் நேற்று முன்தினம் மழை பெய்தது. இந்த மழை அதிகாலை வரை விட்டு, விட்டு கனமழையாக பெய்தது. காலை முதல் மதியம் வரை மழை இல்லை. பின்னர் மதியம் 2 மணிக்கு லேசான மழை பெய்தது. இந்த மழை சிறிது நேரமே நீடித்தது. இருப்பினும் வானம் மேக மூட்டமாக காட்சி அளித்தது. இதேபோல் ஸ்ரீமுஷ்ணம், புவனகிரி, சிதம்பரம், குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், சேத்தியாத்தோப்பு, வேப்பூர், லால்பேட்டை, அண்ணாமலைநகர், காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த வடகிழக்கு பருவமழையால் இதுவரை 8 கால்நடைகள் பலியாகியுள்ளன. 13 குடிசை வீடுகள் விழுந்து சேதமடைந்தது. 7 மின் கம்பங்களும் சேதமடைந்துள்ளன.