தேனி மாவட்டத்தில் பரவலாக மழை: வைகை, சோத்துப்பாறை அணைகள் நீர்மட்டம் உயர்வு


தேனி மாவட்டத்தில் பரவலாக மழை:  வைகை, சோத்துப்பாறை அணைகள் நீர்மட்டம் உயர்வு
x

தேனி மாவட்டத்தில் பரவலாக பெய்த மழை காரணமாக வைகை, சோத்துப்பாறை அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மேலும் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தேனி

பரவலாக மழை

தேனி மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் தேனி நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளமென கரைபுரண்டு ஓடியது. மாவட்டத்தில் உள்ள அணை, அருவி, ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்ததுடன் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வைகை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான வருசநாடு, வெள்ளிமலை, மேகமலை, போடி, உத்தமபாளையம், கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று ் மாலை முதல் இரவு வரை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

நீர்மட்டம் உயர்வு

இதையொட்டி வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் நேற்று முன்தினம் காலை வினாடிக்கு 1,613 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று வினாடிக்கு 2,470 கனஅடியாக அதிகரித்தது. மேலும் முல்லைப்பெரியாறு அணையில் இருந்தும் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதற்கிடையே அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டு குடிநீர் தேவைக்காக மட்டும் வினாடிக்கு 69 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்நிலையில் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக வைகை அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம் இன்று 64 அடியாக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 14 அடி

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்வதால் வைகை அணை விரைவில் முழுக்கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 69.70 அடியாக இருந்தது.

அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து இல்லை. பலத்த மழையால் அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டது. இதனால், அணையின் நீர்மட்டம் இன்று 83.96 அடியாக உயர்ந்தது. ஒரே நாளில் நீர்மட்டம் 14 அடி உயர்ந்தது. நீர்வரத்து வினாடிக்கு 155 கன அடியாக இருந்தது.

கும்பக்கரை அருவி

அதுபோல், 50 அடியாக இருந்த மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் இன்று 50.7 அடியாக உயர்ந்தது. அணையின் நீர்மட்டம் 51 அடியை எட்டியதும் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுவது வழக்கம். அதன்படி பொதுப்பணித்துறையினர் இன்று மாலை 6 மணி அளவில் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். நேற்று நீர்வரத்து வினாடிக்கு 27 கன அடியாக இருந்த நிலையில், இன்று நீர்வரத்து வினாடிக்கு 136 கன அடியாக இருந்தது.

இதேபோல் மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் பெரியகுளம் அருகே இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு கொடைக்கானல் மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் இருந்து நீர்வரத்து ஏற்படும். இந்நிலையில் நேற்று முன்தினம் கொடைக்கானல் மற்றும் அருவி பகுதியில் பலத்த மழை பெய்தது.

வெள்ளப்பெருக்கு

இதனால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையொட்டி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீர்வரத்து சீரான பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்படும் என்று வனத்துறையினர் கூறினர்.

போடி அருகே உள்ள கொட்டக்குடி ஆற்றிலும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் பிள்ளையார் தடுப்பணையில் தண்ணீர் அருவிபோல் கொட்டுகிறது.


Next Story