திருவாரூர் மாவட்டத்தில் பரவலாக மழை
திருவாரூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பரவலாக மழை
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி நேற்று திருவாரூர் மாவட்டத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதனை தொடர்ந்து திருவாரூர், கொரடாச்சேரி, நன்னிலம், குடவாசல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.
பொதுமக்கள் மகிழ்ச்சி
இந்த மழையால் சற்று வெப்பம் தணிந்து குளிர்ச்சி காணப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த மழை குறுவை சாகுபடிக்கு மிகவும் பயனுள்ளது என்று விவசாயிகள் தெரிவித்தனர். பருத்தி சாகுபடியில் தற்போது பருத்தி வெடித்து பஞ்சுகள் சேகரிக்கும் நிலை உள்ளது. இந்தமழை பஞ்சுகளை நனைத்துவிடும். இதனால் பருத்தி பஞ்சுகளின் மதிப்பீடு தன்மை குறையும் என விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
நன்னிலம்
அதேபோல் நன்னிலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று காலை முதல் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் பருத்தி பஞ்சு அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கூத்தாநல்லூர்
கூத்தாநல்லூர் பகுதியில் நேற்று அதிகாலை 5 மணியளவில் திடீரென பரவலாக மழை பெய்தது. இந்த மழை மாலை வரை தொடர்ந்து நீடித்தது. இதனால் கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் தனிந்து குளிர்ந்த காற்று வீசியது.
வடுவூரில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் வடுவூர் வடவாறு, கண்ணன் ஆறுகளில் கல்லணையிலிருந்து பாசனத்திற்காக திறந்து விடப்பட்ட தண்ணீர் வந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.