நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை: பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு
பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு
நீர் பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
பவானிசாகர் அணை
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய அணையாக பவானிசாகர் அணை உள்ளது. இந்த அணையின் நீர்மட்ட உயரம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது. அணையின் நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. அணையில் இருந்து கீழ்பவானி, காலிங்கராயன், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை ஆகிய வாய்க்கால்களில் திறந்துவிடப்படும் தண்ணீர் மூலம் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
கடந்த 2 நாட்களாக அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாகவும், கோவை மாவட்டம் பில்லூர் அணையில் இருந்து அவ்வப்போது மின் உற்பத்திக்காக திறந்துவிடப்படும் தண்ணீராலும் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது.
தண்ணீர் வரத்து அதிகரிப்பு
நேற்று முன்தினம் மதியம் 12 மணிக்கு அணைக்கு வினாடிக்கு 1,022 கன அடி தண்ணீர் வந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 82.49 அடியாக இருந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் குடிநீருக்காக வினாடிக்கு 100 கன அடியும், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்காலில் வினாடிக்கு 900 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டது.
நேற்று மதியம் 12 மணி அளவில் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரத்து 388 கன அடியாக அதிகரித்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 82.54 அடியாக உயர்ந்தது. பவானி ஆற்றில் குடிநீருக்காக வினாடிக்கு 100 கன அடியும், தடப்பள்ளி அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசனத்துக்காக வினாடிக்கு 900 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டது. பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.