புவனகிரி அருகே விதவை பெண் வெட்டிக் கொலை


புவனகிரி அருகே விதவை பெண் வெட்டிக் கொலை
x

புவனகிரி அருகே விதவை பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

கடலூர்

புவனகிரி,

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள கீழமணக்குடி கிராமத்தை சேர்ந்தவர் முத்துவேல். இவருடைய மனைவி சீதா என்கிற சீதாலட்சுமி(வயது 43). இவர்களுக்கு நிஷாந்த்(25), பிரசாந்த்(20) என்ற 2 மகன்களும், நிஷாந்தி(22) என்ற மகளும் உள்ளனர்.

முத்துவேல் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். நிஷாந்திக்கு திருமணமாகி சென்னையில் உள்ளார். நிஷாந்த், பிரசாந்த் ஆகியோர் கோயம்புத்தூரில் கூலி வேலை செய்து வருகின்றனர். இதனால் சீதாலட்சுமி கீழமணக்குடி கிராமத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

வெட்டிக் கொலை

சிதம்பரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் துப்புரவு ஊழியராக சீதாலட்சுமி வேலை பார்த்து வந்தார். வழக்கம்போல் நேற்று முன்தினமும் காலையில் வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீட்டுக்கு வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலையில் நீண்டநேரமாகியும் சீதாலட்சுமி வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. அக்கம்பக்கத்தினர் கூப்பிட்டு பார்த்தும் எந்தவொரு பதிலும் இல்லை. இதனால் சந்தேகமடைந்த அவர்கள், இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கதவு இல்லாத ஒரு அறையில் சீதாலட்சுமி வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவரை மர்மநபர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்திருப்பது தெரியவந்தது.

போலீசார் விசாரணை

இதையடுத்து சீதாலட்சுமியின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சீதாலட்சுமியை கொலை செய்தது யார்?, எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் விதவை பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் புவனகிரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story