மானூர் அருகே டிரைவர் கொன்று எரிப்பு: கள்ளக்காதலனுடன் மனைவி கைது


மானூர் அருகே டிரைவர் கொன்று எரிப்பு:  கள்ளக்காதலனுடன் மனைவி கைது
x

மானூர் அருகே, டிரைவரை கொன்று எரித்த வழக்கில் கள்ளக்காதலனுடன் மனைவி கைது செய்யப்பட்டார்

திருநெல்வேலி

மானூர்:

மானூர் அருகே, டிரைவரை கொன்று எரித்த வழக்கில் கள்ளக்காதலனுடன் மனைவி கைது செய்யப்பட்டார்.

எரிந்த நிலையில் பிணம்

நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள நாஞ்சான்குளம் கிராமத்தில் உள்ள குளத்தில் கடந்த மாதம் 19-ந்தேதி ஆண் ஒருவர் தீயில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், இறந்து கிடந்தவர் நெல்லை தாழையூத்து வீட்டுவசதி வாரிய குடியிருப்பு காலனியைச் சேர்ந்த ராஜா (வயது 45) என்பதும், அவரை கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே முகத்தில் துணியால் அழுத்தி கொலை செய்து, உடலை தீ வைத்து எரித்ததும் தெரிய வந்தது.

லாரி டிரைவர்

ராஜா, லாரி டிரைவராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி வனிதா (33). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். வனிதா, கங்கைகொண்டான் சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். அந்த நிறுவனத்தில் கயத்தாறு அருகே வலசால்பட்டியைச் சேர்ந்த தர்மராஜாவும் (25) வேலை செய்து வருகிறார். வனிதாவுக்கும், தர்மராஜாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனை அறிந்த ராஜா மனைவியை கண்டித்தார்.

கொலை

கடந்த மாதம் 17-ந்தேதி வனிதாவுடன் அவரது வீட்டுக்கு தர்மராஜா சென்றார். அப்போது அங்கிருந்த ராஜா தன்னுடைய மனைவி வனிதாவையும், தர்மராஜாவையும் கண்டித்தார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த தர்மராஜாவும், வனிதாவும் சேர்ந்து ராஜாவை கீழே தள்ளினர். பின்னர் ராஜாவின் முகத்தில் துணியால் அமுக்கி கொலை செய்தனர்.

பின்னர் 18-ந்தேதி நள்ளிரவில் ராஜாவின் உடலை தர்மராஜாவும், வனிதாவும் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்று, மானூர் அருகே நாஞ்சான்குளம் கிராமத்தில் உள்ள குளத்தில் முட்செடிகளுக்குள் போட்டு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளனர்.

கைது

பின்னர் வனிதா தனது கணவர் மாயமானதாக உறவினர்களிடம் நாடகமாடி வந்துள்ளார். இதற்கிடையே ராஜா மாயமானதாக அவருடைய தந்தை செல்லத்துரை தாழையூத்து போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டதில், ராஜா கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

அவரை கொலை செய்ததாக மனைவி வனிதா, கள்ளக்காதலன் தர்மராஜா ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story