ரெயிலில் இருந்து தவறி விழுந்த ஆந்திர வியாபாரி மனைவி பலி
திண்டுக்கல் அருகே ரெயிலில் இருந்து தவறி விழுந்த ஆந்திர வியாபாரி மனைவி பலியானார்.
துணி வியாபாரி மனைவி
ஆந்திர மாநிலம் மதனப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் நாந்துசிங். துணி வியாபாரி. அவருடைய மனைவி கைலாஷ்கான்வால் (வயது 27). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகின்றன. இந்த நிலையில் கைலாஷ்கான்வாலின் தந்தை உத்தம்சிங் நாகர்கோவிலில் தங்கி இருந்து வேலை செய்கிறார்.
இதனால் நாந்துசிங், கைலாஷ்கான்வால் ஆகியோர் மும்பை-நாகர்கோவில் ரெயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் நாகர்கோவிலுக்கு புறப்பட்டனர். இந்த ரெயில் மதுரை ரெயில் நிலையத்துக்கு நேற்று அதிகாலை 4 மணிக்கு சென்றது.
அப்போது திடீரென கண்விழித்த நாந்துசிங் தனது மனைவி தூங்கிய இருக்கையை எட்டி பார்த்தார். அங்கு கைலாஷ்கான்வால் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதையடுத்து ரெயில் முழுவதும் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை.
தவறி விழுந்து பலி
இதுதொடர்பாக மதுரை ரெயில்வே போலீஸ் நிலையத்தில் நாந்துசிங் புகார் செய்தார். இதுபற்றி திண்டுக்கல் உள்பட அனைத்து ரெயில்வே போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் திண்டுக்கல் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் தூயமணி வெள்ளைச்சாமி தலைமையில் ரெயில்வே போலீசார் அவரை தேடி வந்தனர்.
இதற்கிடையே திண்டுக்கல்லை அடுத்த செல்லமந்தாடியில் தண்டவாளத்தின் அருகே கைலாஷ்கான்வால் பிணமாக கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று விசாரித்தனர்.
மேலும் அதிகாலையில் தூக்க கலக்கத்தில் கழிப்பறை சென்ற போது கைலாஷ் கான்வால் தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என்று போலீசார் கூறினர். இதுதொடர்பாக திண்டுக்கல் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.