சமூக வலைதளத்தில் பழகாதே என எச்சரித்ததால் ஆத்திரம்: விவசாயியை தாக்கிய மனைவியின் முகநூல் நண்பர் கைது


சமூக வலைதளத்தில் பழகாதே என எச்சரித்ததால் ஆத்திரம்: விவசாயியை தாக்கிய மனைவியின் முகநூல் நண்பர் கைது
x

சமூக வலைதளத்தில் தனது மனைவியுடன் பழகாதே என்று எச்சரித்த விவசாயியை தாக்கிய மனைவியின் முகநூல் நண்பரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி

மத்திகிரி:

முகநூல் நண்பன்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா மத்திகிரி அருகே உள்ள பொம்மண்டப்பள்ளியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 42), விவசாயி. இவருடைய மனைவி பாக்கியலட்சுமி (30). இந்த நிலையில் பாக்கியலட்சுமி செல்போனில் சமூக வலைதளமான முகநூலில் (பேஸ்புக்) கர்நாடக மாநிலம் பெங்களூரு மாவட்டம் ஆனேக்கல் தாலுகாதிம்மசந்திரத்தை சேர்ந்த ஆனந்தா (33) என்பவருடன் நட்பாக பழகி வந்தார். இது பாக்கியலட்சுமியின் கணவர் வெங்கடாசலத்திற்கு தெரிய வந்தது.

இது குறித்து அறிந்து அவர் தனது மனைவியை கண்டித்தார். பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் தேவையற்ற நபர்களுடன் பேசி, பழக கூடாது என்று எச்சரித்தார். மேலும் ஆனந்தாவையும் எச்சரித்தார். இதனால் பாக்கியலட்சுமிக்கும், அவரது கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

கைது

இதனால் கணவருடன் கோபித்து கொண்டு பாக்கியலட்சுமி, தனது பெற்றோர் வீட்டிற்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சென்றார். மேலும் தொடர்ந்து பேஸ்புக்கில் ஆனந்தாவுடன் பழகி வந்தார். இந்த நிலையில் தனது மனைவியை வீட்டிற்கு வெங்கடாசலம் அழைத்து வந்தார்.

கடந்த 21-ந் தேதி பொம்மண்டப்பள்ளியில் உள்ள நிலத்தில் வெங்கடாசலமும், பாக்கியலட்சுமியும் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஆனந்தா, வெங்கடாசலத்துடன் தகராறு செய்து அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.

இது குறித்து பாக்கியலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் மத்திகிரி போலீசார் விசாரணை நடத்தி ஆனந்தாவை கைது செய்தனர். அவர் மீது ஆபாசமாக பேசுதல், தாக்குதல், கொலை மிரட்டல் பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story