மனைவியின் கள்ளக்காதலன் கத்தியால் குத்திக்கொலை


மனைவியின் கள்ளக்காதலன் கத்தியால் குத்திக்கொலை
x
தினத்தந்தி 5 May 2023 12:30 AM IST (Updated: 5 May 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டி பஸ்நிலையத்தில் காத்திருந்து, மனைவியின் கள்ளக்காதலனை தொழிலாளி கத்தியால் குத்தி கொலை செய்தார். கத்தியால் குத்தியதில் படுகாயம் அடைந்த மனைவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தேனி

கூலித்தொழிலாளி

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா கோம்பைத்தொழு கிராமத்தை சேர்ந்தவர் தீபாவளி (வயது 40). கூலித்தொழிலாளி. இவர், ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு சங்கீதா (27) என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 7 வயதில் ஒரு மகன் இருக்கிறான்.

அதே கிராமத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன் (40). இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். ஈஸ்வரனுக்கும், தீபாவளியின் மனைவி சங்கீதாவுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையறிந்த தீபாவளி, அவர்கள் 2 பேரையும் பலமுறை கண்டித்தார். இருப்பினும் அவர்களது கள்ளக்காதல் தொடர்ந்தது.

போலீசில் தஞ்சம்

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சங்கீதாவும், ஈஸ்வரனும் வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் பாதுகாப்பு கேட்டு, மயிலாடும்பாறை போலீஸ் நிலையத்தில் கள்ளக்காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.

இதனையடுத்து போலீசார், தீபாவளியை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது தனது கணவருடன் வாழ பிடிக்கவில்லை என்று சங்கீதா போலீசில் கூறியதாக தெரிகிறது. இதற்கிடையே இந்த புகாரை, ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக மயிலாடும்பாறை போலீசார் அனுப்பி வைத்தனர்.

கத்தியுடன் காத்திருப்பு

இதுதொடர்பாக விசாரணைக்கு நேற்று காலை 10 மணிக்கு ஆஜராகும்படி மகளிர் போலீசார் 3 பேருக்கும் தகவல் தெரிவித்தனர். கள்ளக்காதலனுடன் ஓடியது மட்டுமின்றி, தன்மீது புகார் கொடுத்ததால் தீபாவளி ஆத்திரம் அடைந்தார்.

அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு வரும் வழியிலேயே ஈஸ்வரனையும், சங்கீதாவையும் தீர்த்து கட்ட அவர் முடிவு செய்தார். இதற்காக ஆண்டிப்பட்டி பஜாருக்கு சென்ற தீபாவளி, நேற்று காலை புதிதாக ஒரு கத்தியை விலைக்கு வாங்கினார்.

பின்னர் ஆண்டிப்பட்டி பஸ்நிலையத்துக்கு வந்து, அவர்கள் வருகையை எதிர்பார்த்து முன்கூட்டியே காத்திருந்தார். காலை 10.30 மணி அளவில் ஈஸ்வரனும், சங்கீதாவும் ஒரு பஸ்சில் இருந்து ஆண்டிப்பட்டி பஸ்நிலையத்தில் ஜோடியாக வந்து இறங்கினர்.

சரமாரி கத்திக்குத்து

இதனையடுத்து சிறிது தூரத்தில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அவர்கள் 2 பேரும் நடந்து சென்றனர். இதனைக்கண்ட தீபாவளி ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்றார். அவர்களுக்கு தெரியாமல் கத்தியுடன் பின்தொடர்ந்தார்.

ஒரு கட்டத்தில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஈஸ்வரனையும், சங்கீதாவையும் சரமாரியாக குத்தினார். இதை பார்த்த பயணிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதேபோல் உயிர் பிழைப்பதற்காக ஈஸ்வரனும், சங்கீதாவும் அங்கிருந்து அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் நோக்கி ஓடினர். இருப்பினும் அவர்களை பின்தொடர்ந்து ஓட, ஓட விரட்டி சென்று தீபாவளி கத்தியால் குத்தினார்.

பரிதாப சாவு

இதற்கிடையே ரத்தம் சொட்ட, சொட்ட கள்ளக்காதல் ஜோடியினர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய வாசலுக்கே சென்று விட்டனர். சிறிதுநேரத்தில் அவர்கள் 2 பேரும் அங்கு மயங்கி விழுந்தனர். இதனை பார்த்த மகளிர் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஈஸ்வரனையும், சங்கீதாவையும் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் வழியிலேயே ஈஸ்வரன் பரிதாபமாக இறந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சங்கீதாவுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீஸ் நிலையத்தில் சரண்

இதற்கிடையே ரத்தக்கறையுடன் கூடிய கத்தியுடன், ஆண்டிப்பட்டி போலீஸ் நிைலயத்தில் தீபாவளி சரண் அடைந்தார். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். ஓட, ஓட விரட்டி மனைவியின் கள்ளக்காதலனை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் ஆண்டிப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story