காட்டுப்பன்றியை வேட்டையாடியவர் கைது
கே.வி.குப்பம் அருகே காட்டுப்பன்றியை வேட்டையாடியவர் கைது செய்யப்பட்டார்.
குடியாத்தம்
குடியாத்தம் வனச்சரகத்திற்கு உட்பட்ட தேவரிஷிகுப்பம் வனப்பிரிவு கே.வி.குப்பம் தாலுகா மகாதேவமலை அடிவாரத்தில் காட்டு பன்றியை வேட்டையாடி இறைச்சி விற்பதாக வேலூர் மாவட்ட வன அலுவலர் பிரின்ஸ்குமார், உதவி வன பாதுகாவலர் மணிவண்ணன் ஆகியோருக்கு தகவல் கிடைத்தது.
அவர்களின் உத்தரவின் பேரில் குடியாத்தம் வனச்சரக அலுவலர் வினோபா, வனவர் மாசிலாமணி உள்ளிட்ட வனத்துறையினர் இன்று காலை கே.வி.குப்பம் அருகே காங்குப்பம் பகுதியில் ஒரு வீட்டின் அருகே திடீர் சோதனை நடத்தினர்
அப்போது அங்கு காட்டுப்பன்றியின் உடல் பாகங்கள் மற்றும் இறைச்சி இருந்தது. வனத்துறையினர் விசாரணை நடத்தியபோது அதே பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் கட்டிடமேஸ்திரி வேலை செய்து வரும் சக்திபாலன் (வயது 32) என்பவர் நாட்டு துப்பாக்கியால் காட்டுப் பன்றியை வேட்டையாடி அதன் இறைச்சியை விற்று வந்தது தெரிய வந்தது.
இதனைத்தொடர்ந்து வனத்துறையினர் சக்திபாலனிடமிருடமிருந்து நாட்டு துப்பாக்கி, வேட்டையாட பயன்படுத்தும் கருவிகள், காட்டுப் பன்றியின் இறைச்சியை கைப்பற்றி குடியாத்தம் வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.
பின்னர் சக்திபாலன் மீது வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.