நெல் வயல்களில் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டுப் பன்றிகள்
அய்யம்பேட்டை அருகே அறுவடைக்கு தயாரான நெல் வயல்களில் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டுப்பன்றிகளை வனத்துறையினர் பிடித்து செல்ல விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அய்யம்பேட்டை அருகே அறுவடைக்கு தயாரான நெல் வயல்களில் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டுப்பன்றிகளை வனத்துறையினர் பிடித்து செல்ல விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறுவை சாகுபடி
தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே உள்ள உள்ளிக்கடை, பெருமாள் கோவில், கணபதி அக்ரகாரம், புத்தூர், பட்டுக்குடி, மணலூர், தேவன்குடி, வீரமாங்குடி உள்ளிட்ட காவிரி, கொள்ளிட கரையோர கிராமங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் குறுவை நெல் சாகுபடி செய்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த நெற்பயிர்கள் தற்போது வளர்ச்சி பருவத்திலும், அறுவடைக்கு தயாரான நிலையிலும் உள்ளன. இதற்கிடையே இந்த நெல் வயல்களில் காட்டுப்பன்றிகள் புகுந்து அறுவடைக்கு தயாரான நெல் பயிர்களை மிதித்தும், அதன் மீது புரண்டும் சேதம் ஏற்படுத்துகிறது. இதனால் விவசாயிகள் மிகுந்த மன வேதனையில் உள்ளனர்.
அறுவடைக்கு தயாரான பயிர்கள்
இதுகுறித்து பட்டுக்குடி கிராமத்தை சேர்ந்த விவசாயி இளையராஜா கூறும்போது, விவசாயம் செய்வதில் தற்போது பல்வேறு பிரச்சினைகள் இருப்பினும் ஆண்டாண்டு காலமாக நெல் சாகுபடி செய்து வருகிறோம். இந்த ஆண்டு வங்கி மற்றும் தனியார்களிடம் கடன் வாங்கி குறுவை நெல் சாகுபடி செய்துள்ளோம். தற்போது இந்த நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் வயல்களில் காட்டுப்பன்றிகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
குறிப்பாக இரவு நேரங்களில் காட்டுப்பன்றிகள் கூட்டம், கூட்டமாக வந்து நெற்பயிர்களை மிதித்தும், அதன்மீது புரண்டும் சேதம் ஏற்படுத்துகிறது. இதில் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சாய்ந்து நெல் மணிகள் வயலிலேயே கொட்டி விடுகின்றது.
எதிர்கொள்ள முடியவில்லை
பன்றிகள் அட்டகாசத்தால் சாகுபடி செலவாவது கிடைக்குமா? என்ற அச்சத்தில் உள்ளோம். விவசாயத்தில் மழை, வெள்ளம், வறட்சி போன்ற பல்வேறு பிரச்சினைகளை சமாளித்த எங்களால் தற்போது காட்டுப் பன்றிகளின் அட்டகாசத்தை எதிர்கொள்ள முடியவில்லை.
எனவே வனத்துறையினர் மூலம் காட்டுப்பன்றிகளை பிடித்து செல்ல மாவட்ட நிர்வாகத்தினர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட வயல்களை வேளாண்மை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, இழப்பீட்டு தொகை வழங்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.