கர்நாடக அரசு பஸ்சை வழிமறித்த காட்டு யானை


கர்நாடக அரசு பஸ்சை வழிமறித்த காட்டு யானை
x

தளி அருகே கர்நாடக அரசு பஸ்சை வழிமறித்த காட்டு யானையால் பயணிகள் அச்சமடைந்தனர்.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஜவளகிரி அருகே உள்ள சென்னமாளம் பகுதியில் இருந்து ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் கர்நாடக மாநில அரசு பஸ் கணக்கபுராவை நோக்கி சென்று கொண்டிருந்தது. தளி அருகே கர்நாடக மாநில எல்லையில் உள்ள காடுசிவன அள்ளி பகுதியில் பஸ் சென்றபோது காட்டு யானை ஒன்று சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்தது.

காட்டு யானையை பார்த்த டிரைவர் பஸ்சை நிறுத்தினார். அப்போது அந்த காட்டு யானை முன்னேறி வந்து பஸ்சை வழிமறித்து சாலையில் நின்றது. சுமார் அரை மணி நேரம் ஆகியும் யானை வழிவிடாமல் சாலையில் நின்றது.

இதையடுத்து பஸ்சில் இருந்த பயணிகள் கூச்சல் போட்டபடியும், டிரைவர் பஸ்சில் அதிக ஒலி எழுப்பியவாறும் யானையை நோக்கி பஸ்சை டிரைவர் இயக்கினார். அப்போது யானை பின்னோக்கி சென்று அதே வேகத்தில் திரும்பி மீண்டும் பஸ்சை நோக்கி வந்தது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகளும் குழந்தைகளும் பீதியில் அலறினர். ஆனால் பஸ் டிரைவர் தொடர்ந்து ஹாரன் ஒலியை எழுப்பியதால் நீண்ட நேரத்திற்கு பிறகு யானை சாலையில் இருந்து விலகி சென்றது. இதையடுத்து அந்த பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. தளி அருகே கர்நாடக மாநில அரசு பஸ்சை யானை வழிமறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story