காட்டு யானை உலா; வாகன ஓட்டிகள் அச்சம்
கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் நள்ளிரவில் காட்டு யானை உலா வந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.
கோத்தகிரி,
கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் நள்ளிரவில் காட்டு யானை உலா வந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.
காட்டு யானை
கோத்தகிரி அருகே குஞ்சப்பனை மற்றும் அதன் சுற்று வட்டார கிராம பகுதிகளில் பலாப்பழ சீசன் நிலவும் போது, பழங்களை உண்பதற்காக சமவெளி பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் இப்பகுதிக்கு வந்து முகாமிட்டன. பலாப்பழ சீசன் முடிந்த பின்னர் சமவெளி பகுதிக்கு யானைகள் திரும்பி செல்வது வழக்கம். ஆனால், கடந்த ஆண்டு இவ்வாறு வந்த யானைகள் திரும்பி செல்லாமல், அதே பகுதியில் முகாமிட்டு வருகின்றன.
அவ்வப்போது கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் உலா வந்த வண்ணம் உள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு மணியளவில் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் தட்டப்பள்ளம் அருகே ஆண் காட்டு யானை ஒன்று சாலையின் குறுக்கே நின்று கொண்டிருந்தது. யானையை கண்ட வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை சற்று தொலைவில் பாதுகாப்பாக நிறுத்தினர்.
வாகன ஓட்டிகள் அச்சம்
ஆனால், அந்த யானை அங்கிருந்து செல்லாமல் நீண்ட நேரம் அதே பகுதியில் நின்று கொண்டிருந்ததது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, சாலையின் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மேலும் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். ½ மணி நேரத்திற்கு பின்னர் அந்த யானை அருகில் இருந்த தேயிலை தோட்டத்திற்குள் சென்றது.
யானை சென்ற பின்னரே வாகன ஓட்டிகள் நிம்மதியடைந்து, அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். போக்குவரத்தும் சீரானது. கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளதால், வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.