வீடுகளை உடைத்து காட்டுயானை அட்டகாசம்


தினத்தந்தி 9 Dec 2022 12:15 AM IST (Updated: 9 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேவாலா அருகே வீடுகளை உடைத்து காட்டுயானை அட்டகாசம் செய்தது. மற்றொரு சம்பவத்தில், யானை துரத்தியதில் தப்பி ஓடிய டேன்டீ ஊழியர் தவறி விழுந்து காயம் அடைந்தார்.

நீலகிரி

கூடலூர்

தேவாலா அருகே வீடுகளை உடைத்து காட்டுயானை அட்டகாசம் செய்தது. மற்றொரு சம்பவத்தில், யானை துரத்தியதில் தப்பி ஓடிய டேன்டீ ஊழியர் தவறி விழுந்து காயம் அடைந்தார்.

வீடுகளை உடைத்தது

கூடலூர் தாலுகா பகுதியில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து வீடுகளை உடைத்து சேதப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் பி.எம்.-2 என்று வனத்துறையினரால் அழைக்கப்படும் காட்டு யானை வீட்டை சேதப்படுத்தி அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை தின்று வருகிறது. மேலும் அந்த யானை, கடந்த மாதம் பாப்பாத்தி என்ற பெண்ணை தாக்கி கொன்றது. இதனால் அந்த யானையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தேவாலா டேன்டீ எண்-3 குடியிருப்புகளை பி.எம்.-2 காட்டு யானை நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு முற்றுகையிட்டது. தொடர்ந்து காளிமுத்து உள்பட 2 பேரின் வீட்டை உடைத்து சேதப்படுத்தியது. மேலும் உள்ளே வைத்திருந்த அரிசியை எடுத்து தின்றது. அப்போது வீட்டுக்குள் இருந்த அவரது குடும்பத்தினர் பயத்தில் கூச்சலிட்டனர். தொடர்ந்து அப்பகுதி மக்கள் திரண்டு வந்து காட்டு யானையை விரட்டியடித்தனர்.

வனத்துறையினர் விசாரணை

எனினும் அப்பகுதியில் நிறுத்தி வைத்திருந்த உபயோகம் இல்லாத வாகனத்தை தள்ளிவிட்டு காட்டு யானை சென்றது. இதனால் வாகனம் சேதம் அடைந்தது. பின்னர் வனத்துறையினர் விரைந்து வந்து பார்வையிட்டனர். தொடர்ந்து பி.எம்.-2 காட்டு யானையை தேடும் பணியில் ஈடுபட்டனர். இது தொடர்பாக பந்தலூர் வனச்சரகர் சஞ்சீவி தலைமையிலான வனத்துறையினர் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தவறி விழுந்து காயம்

இதற்கிடையே தேவாலா அருகே கரிய சோலை பகுதியை சேர்ந்த முனுசாமி(வயது 53), டேன்டீ ஊழியர் ஆவார். இவர் நேற்று மதியம் 2 மணிக்கு குடியிருப்பு பகுதிக்கு செல்லும் குழாய்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதிக்கு வந்த மற்றொரு காட்டு யானை முனுசாமியை திடீரென விரட்டியது உடனே அவர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். சிறிது தூரத்து ஓடிய அவர் தவறி கீழே விழுந்தார். இதனால் அவரது கால் முறிந்தது. அவரது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடி வந்து காட்டு யானையை விரட்டினர். பின்னர் அவரை மீட்டு பந்தலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரி கொண்டு செல்லப்பட்டார்.


Next Story