அறிவிப்பு பலகைகளை உடைத்த காட்டு யானைகள்


அறிவிப்பு பலகைகளை உடைத்த காட்டு யானைகள்
x
தினத்தந்தி 16 Dec 2022 12:15 AM IST (Updated: 16 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மஞ்சூர்-கோவை சாலையில் நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு பலகைகளை காட்டு யானைகள் உடைத்தன.

நீலகிரி

ஊட்டி,

மஞ்சூர்-கோவை சாலையில் நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு பலகைகளை காட்டு யானைகள் உடைத்தன.

காட்டு யானைகள் நடமாட்டம்

நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் இருந்து கெத்தை வழியாக கோவை மாவட்டம் காரமடைக்கு சாலை செல்கிறது. இந்த சாலையையொட்டி அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளதால், காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அந்த சாலையில் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டு உள்ளது.

43 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட சாலையில் குட்டிகளுடன் காட்டு யானைகள் நடமாடி வருகின்றன. அவ்வப்போது அந்த வழியாக செல்லும் அரசு பஸ் உள்ளிட்ட வாகனங்களை நடுவழியில் வழிமறித்து வருகின்றன. மேலும் மஞ்சூர், ஒக்கநாடு, கெத்தை, பெரும்பள்ளம், முள்ளி சோதனை சாவடி வரை உலா வருவதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

அறிவிப்பு பலகைகள் உடைப்பு

இந்தநிலையில் நேற்று முன்தினம் மஞ்சூர்-கோவையில் காட்டு யானைகள் முகாமிட்டன. இதனால் சுற்றுலா வாகனம் தொலைவில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டது. பின்னர் யானைகள் நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு பலகைகளை உடைத்தன. 10-க்கும் மேற்பட்ட வளைவுகளில் உள்ள அறிவிப்பு பலகைகளை உடைத்தும், வளைத்தும் சேதப்படுத்தின. இதனால் பனிமூட்டம் நடுவே மாலை நேரத்தில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வளைவு இருப்பது தெரியாமல் சிரமப்பட்டு செல்கின்றனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, காட்டு யானைகள் சாலைகளில் உலா வருவதால், வாகன ஓட்டிகள் மிகவும் கவனமாக செல்ல வேண்டும். யானையுடன் செல்பி மற்றும் புகைப்படம் எடுக்கக் கூடாது. அதேபோல் அதிகமாக சத்தம் எழுப்பி யானைகளை அச்சுறுத்தக் கூடாது. குறிப்பாக யானைகள் சாலையில் நிற்கும் போது வாகனங்களில் சாலையை கடக்க முயற்சி செய்யக் கூடாது என்றனர்.

பந்தலூர் அருகே மழவன் சேரம்பாடி பகுதியில் நேற்று முன்தினம் இரவு காட்டு யானை புகுந்தது. பின்னர் அங்குள்ள விளைநிலத்துக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சேரம்பாடி வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.


Next Story