பள்ளி நுழைவுவாயிலை உடைத்த காட்டு யானைகள்


பள்ளி நுழைவுவாயிலை உடைத்த காட்டு யானைகள்
x
தினத்தந்தி 17 Jan 2023 12:15 AM IST (Updated: 17 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

குன்னூர் அருகே பள்ளி நுழைவுவாயிலை காட்டு யானைகள் உடைத்து சேதப்படுத்தின. எனவே, யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

நீலகிரி

குன்னூர்,

குன்னூர் அருகே பள்ளி நுழைவுவாயிலை காட்டு யானைகள் உடைத்து சேதப்படுத்தின. எனவே, யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

காட்டு யானைகள்

குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தேயிலை மற்றும் காபி தோட்டங்களின் நடுவே பலா மரங்கள் உள்ளன. பலாப்பழ சீசன் நிலவும் போது, அதனை சுவைக்க சமவெளி பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் பர்லியார், கே.என்.ஆர்.நகர், மரப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் முகாமிடுவது வழக்கமாக இருந்து வருகிறது. அவ்வப்போது யானைகள் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையை கடந்து செல்வதும், குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தியும் வருகின்றன.

குன்னூர் பகுதியில் கடந்த ஒரு மாதமாக குட்டியுடன் 9 காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளன. அவை தேயிலை தோட்டங்கள், குடியிருப்பு பகுதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் உலா வருகின்றன. இதனால் தொழிலாளர்கள் அச்சம் அடைந்து உள்ளனர். இதையடுத்து வனத்துறையினர் தனிக்குழு அமைத்து யானைகளை கண்காணித்து, வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், காட்டு யானைகள் வனத்துறைக்கு போக்கு காட்டி வருகிறது.

நுழைவுவாயில் சேதம்

இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் குன்னூர் அருகே உள்ள ட்ரூக் எஸ்டேட் தனியார் குடியிருப்பு பகுதிக்குள் 9 காட்டு யானைகள் புகுந்தன. அங்குள்ள அரசு உதவி பெறும் ஆரம்ப பள்ளியின் நுழைவுவாயிலை உடைத்து சேதப்படுத்தி வளாகத்தில் நுழைந்தன. மேலும் அப்பகுதியில் உள்ள ரேஷன் கடையும் காட்டு யானைகளால் சேதம் அடைந்து உள்ளது. இதன் காரணமாக கிராம மக்கள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர அச்சம் அடைந்து உள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, 9 காட்டு யானைகள் தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளை முற்றுகையிட்டு வருகின்றன. எனவே, வனத்துறை ஊழியர்களை கூடுதலாக யானைகள் விரட்டும் பணியில் ஈடுபடுத்த வேண்டும். யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்றனர். காட்டு யானைகள் நடமாட்டம் காரணமாக குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும். சாலையில் யானைகள் நின்றால் தொந்தரவு செய்யக்கூடாது. அவை சாலையை கடந்து சென்ற பின்னரே வாகனங்களை இயக்க வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.


Next Story