காபி தோட்டங்களில் காட்டுயானைகள் முகாம்
காபி தோட்டங்களில் காட்டுயானைகள் முகாம்
கோத்தகிரி
கோத்தகிரி அருகே உள்ள குஞ்சப்பனை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பழங்குடியின கிராமங்களில் விவசாயிகள் பலா மரங்களை பயிரிட்டுள்ளனர். இதற்கு ஊடுபயிராக காபி செடிகளை பயிரிட்டு இருக்கின்றனர். தற்போது சீசன் காரணமாக பலா மரங்களில் காய்கள் காய்த்து குலுங்கி வருவதுடன், காபி செடிகளிலும் பழங்கள் பழுத்து உள்ளன. எனவே இந்த பழங்களை தின்பதற்காக சமவெளி பகுதிகளில் இருந்து வந்த காட்டுயானை கூட்டம் குஞ்சப்பனை, மாமரம், கோழிக்கரை ஆகிய பகுதிகளில் முகாமிட்டு உள்ளது.
அவை தனியார் காபி மற்றும் தேயிலை தோட்டங்களில் முகாமிட்டுள்ள நிலையில், பகல் மற்றும் இரவு நேரங்களில் சாலைகள், தோட்டங்களில் உலா வருவதால் பொதுமக்கள் மற்றும் தோட்ட தொழிலாளர்கள் அச்சமடைந்து உள்ளனர். எனவே இங்கு முகாமிட்டுள்ள யானை கூட்டத்தை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.