தோட்டத்தில் முகாமிட்ட காட்டு யானைகள்


தோட்டத்தில் முகாமிட்ட காட்டு யானைகள்
x
தினத்தந்தி 5 Jan 2023 12:15 AM IST (Updated: 5 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

குன்னூர் அருகே தேயிலை தோட்டத்தில் 20 நாட்களாக காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளன. இதனால் பச்சை தேயிலை பறிக்கும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது.

நீலகிரி

குன்னூர்,

குன்னூர் அருகே தேயிலை தோட்டத்தில் 20 நாட்களாக காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளன. இதனால் பச்சை தேயிலை பறிக்கும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது.

காட்டு யானைகள்

குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தனியார் தேயிலை மற்றும் காபி தோட்டங்களில் ஊடுபயிராக பலா மரங்கள் பயிரிடப்பட்டு உள்ளன. பலா பழ சீசன் காலங்களில் பலா பழங்களை ருசிக்க சமவெளி பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் முகாமிடுவது வழக்கமாக உள்ளது. இதனால் மலைப்பாதையில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இந்தநிலையில் சமவெளி பகுதிகளில் இருந்து 9 காட்டு யானைகள் உணவு தேடி குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பர்லியார், கே.என்.ஆர்.நகர், மரப்பாலம் பகுதியில் கடந்த 20 நாட்களாக முகாமிட்டு உள்ளன. அவை சாலையை கடந்து செல்வதோடு, குடியிருப்பு பகுதிகள் மற்றும் தேயிலை தோட்டங்களில் உணவை தேடி செல்கின்றன. இதனால் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

பணிகள் பாதிப்பு

இந்தநிலையில் குன்னூர் காட்டேரி பகுதியில் சாலையோர தேயிலை தோட்டத்தில் காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளன. அவை அவ்வப்போது தோட்டங்களில் உலா வருவதால், பச்சை தேயிலை பறிப்பது, உரமிடுவது, மருந்து தெளிப்பது, பராமரிப்பது போன்ற அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் தொழிலாளர்கள் தேயிலை தோட்டங்களுக்கு செல்லவே அச்சமடைந்து உள்ளனர்.

குன்னூர் அருகே தோட்டங்களில் முகாமிட்டு உள்ள காட்டு யானைகளை வனத்துறையினர் குழுக்களாக பிரிந்து வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அதன் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறார்கள். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, தேயிலை தோட்டங்களில் காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளதால், தொழிலாளர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவ்வப்போது யானைகள் சாலையை கடப்பதால், வாகன ஓட்டிகள் அவற்றை தொந்தரவு செய்யக்கூடாது. வனத்துறை மூலம் குழுக்கள் அமைத்து காட்டு யானைகளை விரட்டும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது என்றனர்.


Next Story