கூடலூர் அருகே தோட்ட அலுவலகம்- குடோனை சேதப்படுத்திய காட்டு யானைகள்- தொழிலாளர்கள் அச்சம்


கூடலூர் அருகே தோட்ட அலுவலகம்- குடோனை சேதப்படுத்திய காட்டு யானைகள்- தொழிலாளர்கள் அச்சம்
x
தினத்தந்தி 24 Sept 2022 12:15 AM IST (Updated: 24 Sept 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் அருகே தோட்ட அலுவலகம், குடோனை காட்டு யானைகள் சேதப்படுத்தியது. இதில் பொருட்கள் பலத்த சேதம் அடைந்தது. இதனால் தொழிலாளர்கள் அச்சம் அடைந்தனர்.

நீலகிரி

கூடலூர்

கூடலூர் அருகே தோட்ட அலுவலகம், குடோனை காட்டு யானைகள் சேதப்படுத்தியது. இதில் பொருட்கள் பலத்த சேதம் அடைந்தது. இதனால் தொழிலாளர்கள் அச்சம் அடைந்தனர்.

காட்டு யானைகள்

கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி ஹெல்லி பகுதியில் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு காட்டு யானை முகாமிட்டது. தொடர்ந்து தோட்ட நிர்வாகத்திற்கு சொந்தமான தொழிலாளர் அலுவலக அறையின் கதவை காட்டு யானைகள் உடைத்தது. பின்னர் உள்ளே சென்று பதிவேடுகளை சேதப்படுத்தியது. அதே பேரூராட்சிக்குட்பட்ட ஹோப் பகுதியில் அதிகாலை 3.30 மணிக்கு காட்டு யானைகள் நுழைந்தது.

பின்னர் தோட்ட குடோன் சுவர் மற்றும் கதவை உடைத்தது. மேலும் அங்கு வைத்திருந்த அரிசி உள்ளிட்ட பொருட்களை காட்டு யானைகள் தின்று சேதப்படுத்தின. மேலும் அங்கு இருந்த தளவாடப் பொருட்களையும் உடைத்தது. அதிகாலை நேரம் என்பதால் அப்பகுதியில் தொழிலாளர்கள் இல்லை. ஆனால் விடியற்காலை வரை காட்டு யானைகள் அப்பகுதியில் முகாமிட்டிருந்தது.

தொழிலாளர்கள் அச்சம்

பின்னர் தேயிலை தோட்டங்கள் வழியாக வனத்துக்குள் சென்றது. தகவல் அறிந்த வருவாய் மற்றும் வனத்துறையினர் விரைந்து வந்து சேதமடைந்த குடோன் மற்றும் அலுவலகத்தை பார்வையிட்டனர். இதனிடையே காட்டு யானைகள் நடமாட்டத்தால் தோட்ட தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே வனத்துறையினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி காட்டு யானைகள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து தோட்ட தொழிலாளர்கள் கூறியதாவது:- காட்டு யானைகள் தேயிலை தோட்டங்கள், பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிக்குள் தினமும் வருகிறது. இதனால் பச்சை தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபடும் போதும், வேலை முடிந்து வீடுகளுக்கு செல்லும்போதும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. சில சமயங்களில் காட்டு யானைகள் தாக்கி தொழிலாளர்கள் பலியாகி வருகின்றனர். எனவே வனத்துறையினர் காட்டு யானைகள் இடமிருந்து தொழிலாளர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story