பலா காய்களை தேடி வரும் காட்டு யானைகள்
கூடலூர் பகுதியில் பலா காய்களை தேடி காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து வருகின்றன. பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
கூடலூர்,
கூடலூர் பகுதியில் பலா காய்களை தேடி காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து வருகின்றன. பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
பலா காய்களை தேடி...
கூடலூர் பகுதியில் கடந்த 2 வாரங்களுக்கு மேலாக வெயிலின் தாக்கம் குறைந்து பரவலாக மழை பெய்து வந்தது. இதனால் பகல் நேரத்தில் குளிர்ந்த காலநிலை நிலவியது. இதனிடையே வனப்பகுதியில் பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் முதுமலை புலிகள் காப்பக கரையோரம் உள்ள கிராமங்களுக்குள் பயிர்களை தேடி காட்டு யானைகள் வந்து செல்கின்றன.
இதேபோல் கூடலூர் பகுதியில் பலா காய்கள் விளைச்சல் அதிகரித்து உள்ளது. இதனால் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. கிராமப்புறங்களில் பலா காய்களை தேடி காட்டு யானைகள் வருவதால் அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டுமென வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
விழிப்புடன் இருக்க வேண்டும்
இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-
கோடை காலத்தில் பசுந்தீவனத்தை தேடி காட்டு யானைகள் ஊருக்குள் வருகிறது. இதேபோல் பலா காய்கள் விளைச்சலும் காணப்படுவதால் பொதுமக்கள் குடியிருப்புகள் உள்ள பகுதிகளில் காட்டு யானைகள் இரவு பகலென எந்த நேரத்திலும் நடமாடி வருகின்றன. காட்டு யானைகளுக்கு வாழை, தென்னை, பாக்கு, பலா உள்ளிட்டவை மிகவும் பிடித்தமானவை.
எனவே, குடியிருப்பு பகுதிகளில் காட்டு யானைகள் வராமல் தடுக்க பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குடியிருப்பு பகுதிகளில் புதர்கள் தொடர்ந்து காணப்பட்டால் உடனடியாக அதை அப்புறப்படுத்த வேண்டும். அவ்வாறு வீடுகளை விட்டு வெளியே வருதல், வெளியிடங்களுக்கு சென்று திரும்பும்போது தனியாக நடந்து செல்லக்கூடாது. மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.