நெற்பயிர், வாழை மரங்களை சூறையாடிய காட்டு யானைகள்
பேரணாம்பட்டு அருகே விவசாயி நிலங்களுக்குள் புகுந்த காட்டு யானைகள் நெற்பயிர் மற்றும் வாழை, தென்னை மரங்களை சூறையாடின.
பேரணாம்பட்டு
பேரணாம்பட்டு அருகே விவசாயி நிலங்களுக்குள் புகுந்த காட்டு யானைகள் நெற்பயிர் மற்றும் வாழை, தென்னை மரங்களை சூறையாடின.
சூறையாடின
பேரணாம்பட்டு அருகே பத்தலப்பல்லி கிராமத்தில் உள்ள மலட்டாறு பகுதிக்கு ஆந்திர வனப் பகுதியிலிருந்து நேற்று நள்ளிரவு 3 காட்டு யானைகள், ஒரு குட்டி யானை என 4 யானைகள் வந்துள்ளன.
இந்த யானைகள் துளசி ராமன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் புகுந்து அறுவடைக்கு தயாராக இருந்த 2 ஏக்கர் நெற்பயிர் மற்றும் தீவன பயிரை சேதப்படுத்தி உள்ளது.
மேலும் அங்கிருந்த தென்னை மரங்களை பிடுங்கி எறிந்துள்ளன பின்னர் பத்தலப்பல்லி அணைத்திட்ட பகுதிக்குள் நுழைந்து விவசாய நிலங்களையும், அதில் இருந்த விவசாயிகளின் வீடுகளையும் சுற்றி, சுற்றி வந்தன.
இதனை பார்த்த விவசாயிகள் அலறி கூச்சலிட்டனர். மேலும் அங்கிருந்த புருஷோத்தமன் என்பவரது தக்காளி தோட்டத்தில் புகுந்து, தக்காளி செடிகளை மிதித்து சூறையாடி, தீவன பயிரையும், கோவிந்தன் என்பவரது நிலத்தில் தீவனப் பயிர் ஆகியனவற்றை மிதித்து நாசப்படுத்தின.
விடிய விடிய அட்டகாசம்
இதனல் அதிர்ச்சியடைந்த விவசாயிகள் தாரை, தப்பட்டை அடித்தும், தீப்பந்தங்கள், பட்டாசு வெடித்தும் யானைகள் விரட்டினர். அப்போது யானைகள் அவர்களை துரத்தின.
இது குறித்து தகவலறிந்த பேரணாம்பட்டு வனச்சரகர் சதீஷ்குமார், வனவர் தயாளன் மற்றும் வனத்துறையினர் சென்று கிராம மக்கள், விவசாயிகள் உதவியுடன் பட்டாசு, பாணம் வெடித்து அணைத்திட்டப் பகுதியையொட்டியுள்ள வனப்பகுதிக்குள் யானைகளை விரட்டினர்.
ஆனால் இந்த யானைகள் வனப்பகுதிக்குள் செல்லாமல், எருக்கம்பட்டு கிராமத்திற்கு செல்லும் கானாற்றில் இறங்கி எருக்கம்பட்டு, கோட்டையூர் வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்தன.
கோட்டையூர் அருகில் உள்ள கிருஷ்ணவேணி, எருக்கம்பட்டு கிராமத்தில் உள்ள சதீஷ் ஆகியோர் நிலங்களில் வாழை மரங்களையும், ராமமூர்த்தி நிலத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர், வாழை மரங்கள், வேணுகோபால் நிலத்தில் தென்னங்கன்றுகள், சேகர் நிலத்தில் ெதன்னை மரங்கள் ஆகியவற்றையும் சேதப்படுத்தின.
நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை விடிய, விடிய தொடர்ந்து யானை கூட்டம் அட்டகாசத்தில் ஈடுபட்டதால், விவசாயிகள் இரவு முழுவதும் தூக்கமில்லாமல் தவித்தனர்.
சேதமடைந்த பயிர்களை வருவாய்த் துறையினர் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
வனப்பகுதிக்குள் விரட்டப்பட்ட யானைக் கூட்டம் மீண்டும் வந்து விடுமோ என இரவு முழுவதும் பீதியுடன் விவசாயிகள் தீப்பந்தங்கள் கொளுத்தி சுற்றிவந்தனர்.