குஞ்சப்பனை வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்த காட்டு யானைகள்
சமவெளி பகுதியில் உள்ள வனப்பகுதிகளில் பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் அங்கிருந்து காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீர் குஞ்சப்பனை வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்து உள்ளன.
கோத்தகிரி,
சமவெளி பகுதியில் உள்ள வனப்பகுதிகளில் பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் அங்கிருந்து காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீர் குஞ்சப்பனை வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்து உள்ளன.
வறண்ட நீர்நிலைகள்
மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை கோடை காலமாகும். இந்த காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், வனப்பகுதிகளில் உள்ள செடி, கொடிகள், புல்வெளிகள் காய்ந்து வருகின்றன. இதனால் வனவிலங்குகளுக்கு பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. வனப்பகுதிகளில் உள்ள நீர் நிலைகளும் வறண்டு வருவதால், தண்ணீர் தட்டுப்பாடும் நிலவுகிறது.
மேலும் வனப்பகுதிகளில் அவ்வப்போது காட்டுத்தீ ஏற்படுவதால், நீர் நிலைகள் மற்றும் ஏரிகள் வறண்டு, வனவிலங்குகளுக்கு தண்ணீர் கிடைக்காமல், அவை தண்ணீர் தேடி இடம்பெயர்ந்து நீண்ட தூரம் செல்கின்றன.
காட்டு யானைகள்
இந்தநிலையில் உணவு மற்றும் தண்ணீர் தேடி சமவெளிப் பகுதிகளில் இருந்து கோத்தகிரி அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதியை கொண்ட குஞ்சப்பனை பகுதிக்கு காட்டு யானைகள் கூட்டமாக வரத்தொடங்கி உள்ளன. அவை அப்பகுதியில் முகாமிட்டு வருகின்றன. இவ்வாறு வரும் யானைகள் குடியிருப்பு பகுதிக்கு வந்தால், மனித-வனவிலங்கு மோதல் ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, யானைகள் குடியிருப்புப் பகுதிக்கு வராமல் தடுக்கும் விதமாக வனப்பகுதியிலேயே வனவிலங்குகளுக்கு தண்ணீர் கிடைக்க தேவையான வசதிகளை செய்ய வேண்டும். வனப்பகுதிகளில் அமைக்கப்பட்டு உள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.